பாத்திரம் தேய்க்கும் பேதை

பாத்திரம் தேய்க்கும் பேதை
பாவலர் கருமலைத்தமிழாழன்
பத்துவய தாகப்பெண் நானோ பிய்ந்த
பழம்பாயில் சுருண்டிருந்தேன் விடியற் காலை
மொத்தமுமாய் இருள்பிரியா அந்த நேரம்
மூதேவி இன்னுமென்ன உறக்க மென்றே
பெத்தவளோ எழுப்புகின்றாள் ! சோர்ந்த மேனி
புரண்டெழுந்தே குடிசைவிட்டு வெளியே வந்தேன்
பெத்தவனோ குடிமயக்கம் தெளியா தின்னும்
பொறுப்பின்றி மூலையிலே விழுந்தி ருந்தான் !

ஊர்க்கிணற்றில் நீரிரைத்தே காய்த்த கையில்
உள்வேலை தாய்க்குற்றத் துணையாய் செய்தே
ஊர்விழிக்கு முன்வீட்டு வேலை செய்ய
ஊருக்குள் பாத்திரங்கள் தேய்க்கச் சென்றேன் !
நார்தோன்றி ஊசிப்போய் நைந்த பண்டம்
நாசியினைத் துளைத்தெடுக்கக் காய்ந்த சோறு
நீர்காண தட்டுக்கள் எடுத்துப் போட்டே
நித்திரைதான் களையுமுன்னே கழுவிப் போட்டேன் !

மூலையிலே களைந்தெறிந்த துணிக ளோடு
மூன்றுமாதக் குழந்தையின்பீத் துணியும் சேர்த்து
சேலையோடு கிணற்றடியில் துவைக்கும் போது
செழித்தவுடல் தினவினிலே வீட்டுப் பையன்
வேலையெதோ இருப்பதுபோல் பக்கம் வந்தே
வேண்டுமென்றே என்முதுகை வருடிச் சென்றான்
வேலையெங்கே போயிடுமோ என்ற அச்ச
வேதனையில் மௌனமாகப் பிழிந்து போட்டேன் !

- 1 -

உச்சிவெயில் வரும்பொழுது மூன்று வீட்டில்
உடல்நோவ வேலையினை முடித்தேன் ; நேற்று
மிச்சத்தைக் கருணைவந்து கொடுக்க ; தம்பி
முகம்வந்து கண்முன்னே நிற்க; வீதி
எச்சலிலே புரளுகின்ற அவனைத் தேடி
இழுத்துவந்தே இருவருமாய் பசிநெ ருப்பில்
எஞ்சியுள்ள வயறுதன்னை ஆற்று வித்தே
என்றும்போல் சாணத்தைப் பொறுக்கச் சென்றேன் !


கிழிந்திருக்கும் சாக்கெட்டைத் தைத்துத் தைத்துக்
கிழிசலினை மூடுதற்கும் இயன்றி டாமல்
வழியெல்லாம் பார்ப்போரின் காட்சி யாகி
வறண்டிருக்கம் தலைமீது கூடை தாங்கி
விழிகளிலே சாலையெல்லாம் தேடித் தேடி
விழுந்திருக்கும் சாணத்தைப் பொறுக்கிப் போட்டே
வழிகின்ற நிலையினிலே குடிசை நோக்கி
வருவதற்குள் சூரியனும் மேற்கில் சாய்ந்தான் !

எடுத்துவந்த சாணத்தை உருட்டி ருட்டி
எதிர்சுவற்றில் வட்டமாகத் தட்டி ; நேற்று
அடுக்கிவைத்த வரட்டிதனைக் கேட்டு வந்தோர்
அளவுக்கு விற்றந்த காசு தன்னை
அடுக்களையின் சொப்புக்குள் மறைத்து வைத்தேன்
அந்நேரம் ஊர்சுற்றி வந்த அப்பன்
குடுகுடென்றே குடிசைக்குள் நுழைந்து சொப்புக்
குள்ளிருக்கும் காசுதனை எடுத்துப் போனான் !
- 2 -

கண்களிலே நீர்தளும்பிக் கன்னம் மீதில்
கறையாக வாசலிலே குந்தி ருந்தேன்
வெண்ணிலவோ என்துயரைப் பார்த்துப் பார்த்து
ஒளிமங்கி மேகத்தில் கண்து டைத்தாள்
மண்சுமந்து கல்சுமந்து சித்தா ளாக
மனதுசுடும் சொல்சுமந்து வேலை செய்தே
கண்சுமந்த துயரோடு தாயும் கூலிக்
களவாகச் செலவுதனை வாங்கி வந்தாள் !

கரிப்புகையில் மீண்டும்நான் கரைந்து போனேன்
கஞ்சிக்கே இப்பாடு ; குடித்தே அப்பன்
எரிக்கின்றான் எம்வாழ்வை; தாய்கோ நாளும்
எலும்புடையும் அடிஉதைகள்; வாழ்வில் நானோ
அறுசுவையை நினைக்கவில்லை அழகாய் ஆடை
அணிகலன்கள் கேட்கவில்லை ; உழைப்ப தாலே
சிறுமையாக நினைக்கின்ற சமுதா யத்தின்
சிந்தனைகள் மாறியெம்மை மதித்தால் போதும் !

- 3 -

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (20-Oct-14, 6:36 pm)
பார்வை : 63

மேலே