உயிராய் நுழையும் தங்கையே நீ - இராஜ்குமார்

உயிராய் நுழையும் தங்கையே நீ
==============================

புன்னகை பூக்கள்
குறுநகை மறக்க
தென்றலின் வாசம்
தீயில் கருகிய கணத்தில்
--வாடிய பூவின் மேல்
--நன்னீர் தெளித்து
--சிரிக்க சொல்லும் சிநேகமாய் நீ ..!

காற்றின் விரல்கள்
கவிதை வெறுக்க
மேகத்தின் தேகம்
புவியில் சிதறியப் பொழுதில்
--கடலின் கரை மேல்
--வண்ணம் குழைத்து
--வரைய நினைக்கும் ஒர்முகமே நீ ..!

உருகிய மனங்கள்
வெறுப்பை விதைக்க
அன்பின் அழகு
இடையில் ஒடிந்த நொடியில்
--இனிய வரி மேல்
--பாசத்தை பதித்து
--மீள வைத்த மின்மினியாய் நீ ..!

சாரல் துளிகள்
சன்னலை விலக்க
விண்மீனின் விழி
இரவில் மறைந்த கணத்தில்
--காகித சுவர் மேல்
--விரலை விரட்டி
--செதுக்க முயலும் கவியாய் நீ ..!

பிரியமான நேசங்கள்
உணர்வை ஒதுக்க
உயிரின் உருவம்
விழியோடு வீழ்ந்த வினாடியில்
--இதய அறை மேல்
--சுவாசம் கொடுத்து
--உயிராய் நுழையும் தங்கையே நீ ..!

- இராஜ்குமார்

=====================================
உணர்விற்கு மதிப்பளித்து
எழுத்தில் உறவாய்
உரிமை எடுத்த
அன்பு தங்கை ப்ரியாவிற்கு....

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (22-Oct-14, 5:49 pm)
பார்வை : 1440

மேலே