மழைமனம்

மழைமனம்
பாவலர் கருமாலைத்தமிழாழன்

மழைபெய்யும் இரவுநேரம் ஏழை ; தம்மின்
மண்குடிசைக் குள்குறுகிப் படுத்தி ருந்தான்
மழைவலுத்துத் தெருவெல்லாம் வெள்ளக் காடாய்
மண்குடிசை சுற்றிலும்நீர் சூழ்ந்த போது
அழைக்கின்ற குரலொலிதான் காதில் வீழ
அந்தஏழை கதவுதனைத் திறந்து பார்க்க
மழைதன்னில் நனைந்தபடி ஒருவன் உள்ளே
மழைக்கொதுங்க இடமுளதா என்றே கேட்டான் !

சிறியதான குடிசைக்குள் ஒருவர் மட்டும்
சிரம்வைத்துப் படுப்பதற்கே இயலும் ஆனால்
உரியவாறு இருவரிங்கே அமர்வ தற்கே
உகந்தவிடம் உள்ளதுள்ளே வாரும் என்றான்
பெரியதொரு மனமுடையோய் வாழ்க வென்றே
பெருமழையில் நனைந்தவனோ உள்ளே வந்தான்
வறியவனின் குடிசைக்குள் தரையின் மீது
வசதியாக இருவருமே அமர்ந்து கொண்டார் !

அடுத்தசில நொடிகளிலே கதவு தட்டும்
அரவந்தான் கேட்டிடவே ஏழை மீண்டும்
தடுத்திருந்த கதவுதனைத் திறந்து பார்க்கத்
தலைநனைந்த மற்றொருவன் மழைக்கொ துங்க
விடுத்திட்டான் கோரிக்கை ! அதனைக் கேட்டே
வீட்டிற்குள் வசதியாக இருவர் மட்டும்
அடுத்தடுத்தே அமர்ந்திடலாம் நின்று கொண்டால்
அடுத்துமக்கும் இடம்கிடைக்கம் வாரும் என்றான் !



நில்லாமல் மழைபொழிய இரவெல் லாமே
நின்றபடி மூவருமே இருந்தா ருள்ளே
மெல்லகதிர் தலைகாட்ட மழையும் நிற்க
மெதுவாக இருவரிலே ஒருவர் சொன்னார்
நல்லவரே நானிந்த நாட்டின் மன்னன்
நல்லமைச்சர் இவரென்றார் ! வேட மிட்டே
அல்லலுறும் மக்கள்தம் குறைகள் காண
அல்பொழுதில் வந்திட்டோம் நகர்வ லந்தான் !

மண்குடிசை என்றபோதும் எங்க ளுக்காய்
மனமுவந்து நின்றிருந்தாய் இரவெல் லாமே
உன்னுடைய இரக்ககுணம் உதவும் பண்பை
உண்மையிலே பார்த்துநாங்கள் உவகை கொண்டோம்
தன்னலமே இல்லாத உம்மை போன்றோர்
தாமிந்த நாட்டிற்குச் சொத்தாம் என்றே
தன்கழுத்து முத்துமாலை எடுதத ளித்தே
தன்கரத்தால் மன்னனுமே தழுவிக் கொண்டார் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (25-Oct-14, 3:22 pm)
பார்வை : 187

மேலே