யார் யோக்கியன்

பதுக்கல்காரர்கள்
பெருகிவிட்டார்கள்.- வாக்காளர்கள்
ஒதுக்கப்பட்டவர்களாக
ஒடுங்கி வாழ்கின்றோம்.

இவர்கள்
சுகவாசியாக வாழ்வதற்கு - எங்களின்
சுவாசத்தையல்லவா
சுவாசிக்கின்றார்கள்.

கணக்கில் வராத
கறுப்பு பணங்கள்
அந்நிய நாட்டு சுடுகாட்டில்
ஆர்பரித்து எழும் பிணங்களாக
அவதரித்து பெருகி வளர்கின்றன.

பதுக்கியவர்கள் - இந்திய தேசத்தில்
பண்பாளர்களாய் காட்சியளிக்கிறார்கள்.
வெள்ளுடையில் வள்ளல்களாய்
வலம் வருகிறார்கள். - பல
வளமும் பெறுகிறார்கள்.

பொழுதுப் போக்கிற்காக
புதுக்கட்சி தொடங்குகிறார்கள்.
பசுமைத் தாயகம் என்றும் சமூக நீதி என்றும்
பறை சாற்றுகிறார்கள்.

அடுத்தவரைக் குறை சொல்லியே -தன்வீட்டு
அடுப்பங்கரையை சுத்தமாக்குகிறார்கள்
தேசத்தை குப்பையாக்கி - தன்
தேகத்தை தூய்மையாக்குகிறார்கள்.

கலர்ப்படம் பார்ப்பதுபோல் - பொருளில்
கலப்படம் செய்கிறார்கள்.-அவர்களுக்கு
காவலர்களாய் இருக்கிறார்கள்.
கடன் கொடுத்தவனின்
கணக்கை முடிக்க - புதுக்
கணக்குப் போடுகிறார்கள்.

சுதந்திர மனிதனே - இந்த தேசத்திற்குள்
யார் யோக்கியன் கண்டுபிடி

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (28-Oct-14, 8:24 am)
பார்வை : 145

மேலே