தாய் தந்தை அன்பு

நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்

சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்

சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.

மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்

வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன

இலையுதிர் காலம் கண்டு
இனி பயனில்லை என்று
ச(சொ)த்துக்களை சுருட்டிக் கொண்டு
சொல்லாமல் சென்றன.

உடலின் சுருக்கம் வயதை காட்ட
உயிரின் இறுக்கம் நோயை கூட்ட
உழைக்க உறுதியின்றி
உறவுகள் ஏதுமின்றி
ஊனுடம்பு நொந்தன இருமரங்கள்

இருமரங்களின் இறுதிக்கிளையில்
இளைப்பாற ஒரு பறவை வர
இதுதான் இறுதி நாளென
இரு இதயங்கள்
இரங்கல் செய்தி சொல்லிவிட
இருப்பிடம் தந்த மரத்தின்
இறுதி சடங்கில்
இறகுளர்த்திய பறவைகள்
இழப்புணர்ந்து அழ
இரு மரங்களின்
இறுதி மூச்சாய்
ஒற்றை சருகு ஓயாமல் ஆடியது
அது,
பெற்ற பிள்ளையை காண ஏங்கியது...


V.Seethaladevi
BCA 3rd year Swami Dayananda Arts&Science College
Manjakkudi Kodavasal(tk) Thiruvarur(dt)

எழுதியவர் : வீ. சீதளாதேவி (29-Oct-14, 1:54 pm)
Tanglish : thaay thanthai anbu
பார்வை : 786

மேலே