ஆவி மனம்
![](https://eluthu.com/images/loading.gif)
மூடுபனிக் காலத்தில்
கிழிசல்கள் வழித்
தவழும்
சில்லிட்டப் பிழைகள்
உனது ....
இருள் மூட்டத்தில்
நெளிகின்ற
கருந்திரள் நாகங்களைக்
கைதொட்டு
வெடுக்கிட்டுக் கரையும்
உள்ளூர உருளும்
உயிர்ப்பந்தை
நுனிநாக்கில் துப்பும்
சகலமும் - உன்னுள்
வேடிக்கையான போது
என்னில்
எதுவொன்று பூப்பெய்துமோ
அதுவானது நீ …..
யாருமற்ற தனிமையில்
முதுகு சொடுக்கும்
அச்சத்தின்
நீளுகின்ற கைகளில்
சூனிய ரேகைத் தடவாளங்களின்
திரிசங்குக் குறியீட்டில்
காவுகொடுக்கும்
மானுடத்தின்
சதையில்லாப் பிண்டமானாய்....
வதைப்பது மட்டுமே
சாத்தியமென
கிளைக் கிடங்காய்
நெஞ்சுக்குள் வேரூன்றி
புறமொன்றின்
முகம் காட்டுக் கண்ணாடியில்
கனவுக்குள் பிடிபடா
எனதுருவம் ஏற்றினாய்
எந்நாளும்....
பிடிபடாக் காரணங்கள்
விலைபேசும்
பூவுலகக் காட்சியில்
ஆறறிவு மலராத
சாதுரியப் பதிலிருத்தும்
கடுந்துகள்ச் சாம்பல் உதிரும்
காற்று பொம்மையானாய்......
நிறைகுடம் குறைகுடம்
வெற்றுக்குடமும்
கூத்தாடும்
மனமென்ற ஒன்றை
சிறைக்குள் வைப்பதா
விடுவிப்பதா ?!
பழங்கிடையான்களின் மீது
படிந்திருக்கும்
தூசியினைப் போல
திசையெல்லாம் கூடுகட்டும்
நமட்டுச் சிறகுகளாய்
படபடக்கிறதொரு
முற்றுப்புள்ளி .......!