வாழும் வரிகளில் வாழும் கண்ணதாசன்

வாழும் வரிகளில் வாழும் கண்ணதாசன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

புரட்சித்தீ விடுதலையை மூட்டி விட்டான்
புதுயாப்பில் பாரதிதான் புதுமை செய்தான்
புரட்சித்தீ பகுத்தறிவை மூட்டி விட்டான்
புதுமரபில் பாவேந்தன் பொதுமை செய்தான்
புரட்சித்தீ பலதுறையில் மூட்டி விட்டே
பொருள்புதிதாய் சுவைபுதிதாய் சொற்கள் பெய்து
வறட்சியுற்ற தமிழ்நிலத்தில் சந்தப் பாவை
வளர்த்திட்டான் கண்ணதாசன் வளமை செய்தான் !

சிறுகூடல் பட்டியென்னும் சிற்றூர் தன்னில்
சிந்தனையின் மலராகப் பூத்து வந்தான்
வெறுங்கூடாய் வாழ்ந்துவந்த கிராமத் துள்ளே
வேதனையில் சாதனையாய் வளர்ந்து வந்தான்
நறுங்கல்வி பள்ளியிலே பயின்றி டாமல்
நாளும்தன் அனுபவத்தில் பெற்று வந்தான்
சுரும்பைப்போல் இலக்கியத்தேன் மாந்தி மாந்தி
சுடர்கின்ற கவிவிளக்காய் நிமிர்ந்து நின்றான் !

கோடையிலே வற்றிவிட்ட ஏரி யைப்போல்
கொஞ்சுதமிழ் வறண்டிருந்த காலம் தன்னில்
மேடையிலே சொல்மழையைப் பெய்த அண்ணா
மேன்மையைப்போல் கவிமழையைப் பெய்த மேகம்
கூடையிலே கொய்துவந்த மலர்கள் போலக்
கொட்டுகின்ற கவிமலர்கள் குவிந்த நெஞ்சம்
ஆடையினை நெய்தல்போல் நாக்கி னாலே
ஆயிரமாய்க் கவிநெய்த நெசவுக் காரன் !





தென்றல்வந்து போனதற்குச் சுவடா உண்டு
தேன்தமிழை விஞ்சுகின்ற சுவையா உண்டு
அன்னையன்பை மிஞ்சுகின்ற அணைப்பா உண்டு
அருந்தோளின் உழைப்பைவெல்லும் கணையா உண்டு
என்கின்ற பலமின்னல் அடுக்கி வைத்த
எழிலான மாங்கனியைப் போல நூல்கள்
புன்னகையில் பொன்னகையும் சேர்ந்த தைப்போல்
புதுமையிலே பழமையினைச் சேர்த்த ளித்தான் !

மனிதரினைப் பாடமாட்டேன் என்றே ஈயும்
மனங்களினைப் பாடியவன் மயக்கு கின்ற
வனிதையரைப் பாடமாட்டேன் என்றே தாய்மை
வளவன்பைப் பாடியவன் நெஞ்சம் கூம்பிக்
குனிந்தவரைப் பாடமாட்டேன் என்றே உழைப்பால்
குனிந்தவரைப் பாடியவன் இரக்க மில்லா
தனித்தவரைப் பாடமாட்டேன் என்றே நட்பால்
தழைத்தவரைப் பாடியின்னும் வாழ வைத்தான் !

தொழுவதுவா நல்லின்பம் தலைவர் காலைத்
தொடுவதுவா நல்லின்பம் மங்கை மேனி
தழுவுவதா நல்லின்பம் சுவையாய் உண்டு
தணிவதுவா நல்லின்பம் மயங்கி ஆடை
நழுவிவிழ மாந்துகின்ற மதுப்போ தையில்
நனைவதுவா நல்லின்பம் இல்லை இல்லை
அழுவதுவே நல்லின்பம் பிழையு ணர்ந்து
அழுவதிலே சுகமான கவிதை தந்தான் !









கோப்பையிலே குடியிருந்த போதும் பக்கம்
கோலமயில் துணையிருந்த போதும் சாகாக்
காப்பியங்கள் தந்தகவிஞன் ! போதை கொண்ட
காலையிலும் போதையேற்றும் கவிதை பாடும்
நாப்பிறழா மேதையவன் ! கால்கள் மாறி
நாளுமொரு கட்சிவழி சென்ற போதும்
மூப்பில்லா கவிதைகளைத் தந்த தாலே
முனிவோரும் குழந்தையவன் என்ற கவிஞன் !

கலைமகளின் கைப்பொருளாய் இருந்த போதும்
கட்சியெனும் கடைப்பொருளாய்க் கலந்த போதும்
விலைமகளின் மடிப்பொருளாய் வீழ்ந்த போதும்
வீணருக்கு விளைபொருளாய் விளைந்த போதும்
அலைகழியும் பொருளாக அலைந்த போதும்
அமைதியிலா பொருளாக அழுத போதும்
நிலைகுலைந்து போகாதப் புலமை யாலே
நித்தநித்தம் கவிபாடி நின்ற கவிஞன் !

காலத்தின் கணிதம்நான் கண்ணில் காணும்
கருப்பொருளை உருப்பொருளாய் ஆக்கும் தெய்வம்
ஞாலத்தில் விலையில்லா பொருளென் செல்வம்
ஞானத்தால் சரிதவற்றை இயம்பு வன்யான்
கோலத்தின் மாற்றமெலாம் அறிவின் வீச்சு
கோள்கையெலாம் முதிச்சியினால் வந்த ஆட்சி
ஓலமில்லை என்கவியே நாட்டின் சட்டம்
ஓர்கவென ஒலித்தவன்தான் கண்ண தாசன் !







காசிற்குப் பாட்டெழுதித் தந்தான் கம்பன்
காசில்லை என்றபோதும் கூழுக் காக
மாசில்லா பாட்டெழுதித் தந்தாள் அவ்வை
மண்குவளை மோர்கொடுத்த ஆச்சி மீது
ஆசுகவி காளமேகம் வெண்பா சொன்னான்
அடுத்தடுத்துக் காட்சிகளை சொல்லும் போதே
பேசுகவி பல்லவிகள் அருவி போல
பொழிந்ததிரைக் கவிஞன்தான் கண்ண தாசன் !

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வீசி
மகிழ்ச்சிதர வெறுத்திடுமா ! ஏழை யென்றால்
வெண்ணிலவும் ஒளியுமிழ மறுப்பா சொல்லும்
வெறும்நிலத்தைச் செழிப்பாக மாற்று கின்ற
திண்தோளின் உழைப்பில்தான் உலகம் வாழும்
தினமவரின் வியர்வையில்தான் வனம்கொ ழிக்கும்
பண்பாடி அவர்பெருமை போற்று கின்ற
பாட்டாளி கவிஞன்தான் கண்ண தாசன் !

திருவாகத் தேவர்கள் மலர்பொ ழிந்தால்
தீண்டக்கரு நாகங்கள் காலி ருக்கும்
பெரும்புகழின் சான்றோர்கள் முன்னால் நின்றால்
பெருங்கயவர் முதுகிற்குப் பின்னால் நிற்பர்
ஒருகாலைச் சந்தனத்தில் வைத்தால் சேற்றில்
ஒருகாலை வைப்பதுவே அவன்வா டிக்கை
கருவாக இவைகவிதை யான தாலே
காலத்தை வென்றவனாய் வாழு கின்றான் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (1-Nov-14, 3:47 am)
பார்வை : 94

மேலே