வன்முறையில் என்னினமா

எங்கிருந்து பூக்கிறது?
...எப்படித்தான் காய்க்கிறது ?
....என்இளைஞன் உள்ளத்தில்
.....எரியுமிந்த வன்முறைத்தீ?!
அங்கமெலாம் கொதிக்கிறது !
...அறிவுமனம் துடிக்கிறது !
....அன்றாடம் அரங்கேறும்
.....அலங்கோலம் காணுகையில்
பொங்கிவரும் ஆவேசம் !
...பொறுப்பில்லா உல்லாசம் !
....பொல்லாத வன்முறையால்
.....போவதுநாம் எத்திசையில் ?
தங்கமகன் எனப்பெற்றோர்
...தவமெனவே வளர்த்திடும்நீ
....தறிகெட்டுப் பதின்மத்தில்
.....தப்புசெயப் போவதுமேன்?
சங்கம்வைத்து தமிழ்வளர்த்த
...சந்ததியில் பிறந்தவனா
....சாக்கடையாம் வன்முறைக்கு
.....சங்கமொன்று வைத்திடுவான்?!
பங்கமதை பண்பின்றி
...பாரினிலே விளைத்திடுவோர்
....பலகாலம் வாழ்வதில்லை !
.....பட்டுகெட்டு போவரன்றோ!?
சிங்கமென நம்முரிமை
...சீறித்தினம் கேட்காமல்
....சிந்தனையைக் கொன்றுவிடும்
.....சீரழிக்கும் வன்முறைஏன்?!
இங்கிதமாய் நாளைவரும்
...எதிர்காலம் சிரித்திடுமே
....இன்றுசெயும் தீமைகளோ
.....என்றும்நமை எரித்திடுமே !
தங்கவிடு நற்குணத்தை
...தகர்த்துவிடு வீண்கோபம்
....தடைகளை நீதாண்டிதினம்
.....தளைத்திடலாம் அச்சம்விடு !
இங்கிருக்கும் சிறுபான்மை
...என்னுமொரு மனப்பான்மை
....இப்போதே விட்டொழித்து
.....ஏற்றிடவா வெற்றிக்கொடி !
மங்களமும் பெருகிடட்டும்
...மனங்களுமே இணைந்திடட்டும்
....மாற்றிடலாம் வரலாற்றை
.....மானமுடன் புறப்படுடா !
சங்கிலிபோல் ஒன்றுபட்டு
...சமத்துவமாய் நின்றிங்கு
....சத்தான சமுதாயம்
.....சாதிப்போம் முடிவெடுடா!!

எழுதியவர் : அபி (4-Nov-14, 2:48 pm)
பார்வை : 161

மேலே