மௌனப் போராட்டம் நூல் ஆசிரியர் கவிஞர் சீர்காழி உ செல்வராஜு நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

மௌனப் போராட்டம்!
நூல் ஆசிரியர் : கவிஞர் சீர்காழி உ. செல்வராஜு
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015. விலை : ரூ. 75.பேச 9842974697
‘மௌனப் போராட்டம்’ நூலின் தலைப்பு என்றாலும், நூலின் உள்ளே கவிதைகளில் போராட்டம் இல்லை. நதி போல நடந்தே செல்கின்றன கவிதைகள். குழந்தைப் பாடல்கள் போன்ற கவிதைகளும் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் சீர்காழி உ. செல்வராஜு அவர்கள் பிறந்து வளர்ந்தது தண்ணீர்பந்தல் ஆனைக்காரன் சத்திரம் சீர்காழி வட்டம். அதனால் பெயரோடு சீர்காழி என்பதையும் இணைத்துக் கொண்டார். சீர்காழி என்ற ஊரின் பெயரை வாசித்ததும் என் நினைவிற்கு வந்தது. பாடல் அரசர் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் அவரது மகன் மருத்துவரான போதும் இசையில் நாட்டம் கொண்டு தந்தை போலவே சிறப்பாகப் பாடி வரும் திரு. சிவசிதம்பரம் அவர்களும். சீர்காழி என்ற ஊருக்கு பெருமை சேர்ப்பவர்கள் வரிசையில் நூலாசிரியர் கவிஞர் உ. செல்வராஜு அவர்களும் இடம் பிடித்து விட்டார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர், புத்தகத் திருவிழாவை, தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் கோலாகலமாக நடத்தி வருபவர். திரு. த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் வாழ்த்துரை நன்று. நூலாசிரியர் கவிஞர் சீர்காழி உ. செல்வராஜு அவர்கள் சிங்கப்பூரில் உள்ள எண்ணெய்க் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரிய பணியாகும். கவிதைகள் யாவும் மென்மையாகவும், மேன்மையாகவும் உள்ளன. அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கு பாராட்டுக்கள். பதிப்பகத்துறையில் முத்திரை பதிக்கும் வண்ணம் தொடர்ந்து நூல்கள் வெளியிட்டு வருவதற்கு பாராட்டுக்கள்.
இந்த நூலில் 69 தலைப்புகளில் புதுக்கவிதை எழுதி உள்ளார். இந்த நூலை பெற்றோருக்கு காணிக்கை ஆக்கியது சிறப்பு.
முதல் கவிதை அம்மா பற்றிய கவிதை நன்று.
அம்மா!
அன்று முதல்
ஆசையோடு
இனிமையாய்
ஈர்த்துக்கொண்டு
உரிமையோடு
ஊன்றுகோலாய்
எச்சரித்து
ஏற்றம் காண
ஐம்பொறிகளை
ஒன்றுசேர்த்து
ஓய்ச்சலின்றி
ஔசித்தியத்தை எனதாக்கி
அஃதுணர்த்தி உதிரத்தோடு இணைத்து விட்டாய்!
பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாணியில் தம்பிக்கு புத்தி சொல்லும் விதமாக வடித்த கவிதை நன்று!
உழைப்பே மூலதனம்!
உழைத்தால் உணவு கிட்டுமடா – தம்பி
உற்றார் உறவினர் சிறந்திடலாம்!
கற்றால் நாமும் உயர்ந்திடலாம் – தம்பி
கற்பதனால் அறிவைப் பெருக்கிடலாம்.
கவிஞருக்கு கற்பனை அவசியம். கவிதைக்கு கற்பனை அழகு சேர்க்கும், எருதுகள் பேசுவது போல கற்பனை செய்து கவிதை வடித்துள்ளார்.
எருதுகள் பேசினால்...
எருதுகளே எருதுகளே எங்கே போறீங்க!
மருது வீட்டு கொல்லையில் உழப் போகிறோம்
உழுவதனால் உங்களுக்கு என்ன பயனுங்க?
உழுவதனால் ஆரோக்கியமா இருக்கலாமுங்க.
இது போன்ற சிறுவர் பாடல் வடிவில் பல கவிதைகள் உள்ளன. நம் வீட்டில் உள்ள சிறுவர்களிடம் கொடுத்து கவிதைகளை படிக்க வைக்கலாம். வாசித்தால் அவர்களுக்கு தமிழ்மொழி பற்றிய புரிதல் உண்டாகும். தாய்மொழிப்பற்று வரும். நாட்டில் எங்கு பார்த்தாலும் சாதி, மத சண்டைகள், மனிதநேயம் என்பதை மறந்து வருகின்றனர். தன்னலமிக்கவர்களாக மாறி, பொறுமை இழந்து, பொது நலம் என்பதையே புறக்கணித்து வருகின்றனர். அவர்களுக்கான கவிதை ஒன்று.
ஒரே வானத்தின் கீழ்!
வாதங்கள் பேதங்கள் வகுத்திட்டான் – கூடவே
வாழும் நெறிமுறை தொலைத்திட்டான்
சாதிகள் பற்பல பிரித்திட்டான் – தன்
சமத்துவ மாண்பினை ஒழித்திட்டான்.
மனிதநேயம் என்பது மாயையோ – எங்கும்
மந்தை மந்தையாய் பிணக்குவியலே
மானிட விரும்பிகளே சற்றே சிந்திப்பீர் – இந்த
மக்களைக் காத்திட துணை புரிவீர்.
பட்டாம் பூச்சி பற்றி, பிஞ்சுக் குழந்தைகள் பற்றி பல்வேறு கவிதைகள் ரசிக்கும்படி எழுதி உள்ளார். பாராட்டுக்கள். இளைய சமுதாயத்தினருக்கு அறிவுரை கூறிடும் விதமாக பல கவிதைகள் உள்ளன. அவற்றில் பதச்சோறாக ஒன்று.
காலத்தின் அருமை!
முயன்றால் ஆகாதது எதுவுமில்லை
முயற்சியே வாழ்க்கை உந்துவேகம்
முற்போக்குச் சிந்தனை முழுமனதாய்
முயற்சி செய்திடின் முன்னேறிடலாம்
உழைக்கும் பருவத்தில் உழைத்திடுங்க
பிழைக்க அது தானே சிறந்தவழி
தழைக்கும் சமூகம் எளிதாக
தரணியில் தவழ்ந்து சிறந்திடலாம்.
பெற்றோர் பற்றிய கவிதை ஒன்று பெற்றோரின் பெருமை சொல்வதாகவும், பெற்றோரின் கடமை சொல்வதாகவும் உள்ளது.
சமுதாயச் சுமைதாங்கி
அறிவிற்கு அப்பா
அன்பிற்கு அம்மா
நிதானத்திற்கு அப்பா
நேர்மைக்கு அம்மா
உழைப்பிற்க்கு அப்பா
உருகிட அம்மா
உதவிக்கு அப்பா
உணர்விற்கு அம்மா
நூலாசிரியர் கவிஞர் சீர்காழி உ. செல்வராஜு அவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருவதால் தான் வாழ்ந்து வரும் சிங்கப்பூர் பற்றியும் கவிதை வடித்துள்ளார்.
வான் பூங்கா!
சிங்கையின் வானுயர்ந்த கட்டிடங்கள்
சிங்கார பூமியின் அற்புதங்கள்
விண்ணில் கட்டிய பூங்காவிலே
கண்ணில் தெரிவதோ கடலலைகள்
கருப்பர்களின் விடுதலைக்கு வித்திட்டவர். நம்பிக்கை நட்சத்திரம் மாமனிதர் நெல்சன் மண்டேலா பற்றியும் கவிதை உள்ளது.
மானுடத்தை வென்ற மண்டேலா!
தன்மானச் சிங்கமே
தரணியை ஆண்டு விட்டாய்
உலகெலாம் அமைதியினை
உலாவரச் செய்து விட்டாய்
உரிமைக்குப் போராடி
உள்ளங்களைக் கவர்ந்து விட்டாய்
இனத்தைக் காத்திடவே
இன்னல்களை ஏற்றுக்கொண்டாய்
அமைதியாய் உறங்கிடுவாய் தாலேலோ
அழியாப் புகழ் பெற்றவனே தாலே தாலேலோ!
கண்ணுக்குப் புலப்படாத காற்று பற்றியும் கவிதை எழுதி உள்ளார். காற்றை கவிதையால் உணர்த்தி வெற்றி பெறுகின்றார்.
காற்றே!
சுவையற்ற நீ, சுவாசத்தைத் தருகிறாய்
சுமைகளை உன்னிடம் இறக்கி வைக்கிறார்கள்
நீயோ வஞ்சமின்றி தாராளமாய்
வழங்குகின்றாய் கொடைவள்ளலாக
உன்னை அடக்கி வைக்கலாம் – ஆனால்
அடங்க மறுப்பாய்
சில நேரங்களில் !
இப்படி பல்வேறு பொருள்களில் சிந்தித்து கவிதைகள் வடித்த நூலாசிரியர் சீர்காழி உ. செல்வராஜு அவர்களுக்கு பாராட்டுக்கள்.
.