தேவதைக்களவு

தேவதைக்களவு
===============
ஏதும் தெரியாமல்
வரிகள் நிரம்பிக்கொண்டிருந்த முன்னல்களினோடு
துணைக்கு வந்தாள்
களிப்பாட்டங்கள் நுனியேற
திண்மை வேண்டாமென்றேன் கேட்கவில்லை
உணங்கல்களை நேடி
உவர்ப்பை பெற்றுக்கொண்டாள்
எந்நேரம் கனிந்தாள் ,,
என் எச்செய்கையினாலே என விளங்கவில்லை
ரீங்காரம் அடித்துக்கொண்டே
இருக்கிறது
எனை கண்டுகொள்வதே இல்லை எனும்
அவளின் ஆதித் துலக்கல்களில்
கதலியாயிற்று சித்தம்
பந்தனமற்ற அடைமழைப்பருவங்களில்
இறுகப் பொத்திக் கொண்ட
இதயத் தாழக்கோல்கள்
தகர்ந்து கொண்டேயிருக்கின்றன
அனுமதிக்கத் தேடும் என் தனிமைகள்
அவளின் அரவம் கண்டு
கௌரவ நீர்வஞ்சி சுரந்துவிடுகின்றன
உதடுகள் ஒட்டிக்கொள்ள
தொண்டைக்குழிக்குள் விரல் புதைத்து
தூர்வாருகிறாள்
என்ன கிடக்கிறது என்றறிய
தெரியவில்லைபோல்
இமிழ்த்தலினால் உமிழ்ந்தவை எல்லாம்
வைதல் அமிலந்தான் என
நேரம் கடந்த சண்டைகளுக்கப்பால்
உறங்கலாமா என்றவள்
சட்டை பொத்தானை மென்றுக்கொள்ளும்
பசி ஒன்றை நிகழ்த்துகின்றாள்
பிராதக்காலத்தின்
ஆதவ விழிப்புகளுக்குமுன்
மதர்ப்புகள் நிறைந்தோடும்
தியக்கங்கள் தளர்த்தி
மகமுறை இட்டுவிட
பிரசித்தம் கொண்டு
சுவேதம் பிறக்கவேண்டுமாய்
யாருமில்லா நீராழிக்கரையில்
சங்கைத்தவிர்த்த
ஓகையுடன்
ஆடைக்கலைத்து மாதிரம் நோக்கி
ஆணை பிறப்பித்தாள்
அந்த மூலிகைக் காற்றிற்கு
அனுசரன்
அனுசரன்