உணர்வுகளின் ஊர்வலம்- போட்டிக் கவிதை- ஆனந்த்-
இதற்கு மேல் தாங்க முடியாத வறுமையில்
திருடுவதற்கு சுவர் ஏறிக்
குதிக்கிறான் ஒருவன்...
மத்தியான பிரியாணிக்கு டூ வீலர்
ஒன்றை ஓரங்கட்டுகிறார்
டிராபிக் போலீஸ் ஒருவர்...
கூலிக்குப் போய் சம்பாரித்த பணத்தில்
கட் அவுட்,பாலாபிஷேகம் என்று
செலவழித்துக் கொண்டிருக்கிறான்
ரசிகன் ஒருவன்..
அடுத்த படத்திற்கு
6 கோடி அட்வான்ஸ் கேட்கிறார்
பிரபல நடிகர் ஒருவர்...
பெரிய உதவியொன்றை செய்து விட்டு
எந்த நன்றியும் எதிர்பார்க்காமல்
போகிறார் ஒருவர்...
கந்து வட்டிக்கு கொடுத்த பணம்
திரும்பி வராததால்
மீட்டர் வட்டி போடலாமா என
யோசித்துக் கொண்டிருக்கிறான் ஒருவன்...
விதவை பென்ஷன் வாங்குவதற்கு
10 வருடங்களாக பஞ்சாயத்து அலுவலக படிக்கட்டுகளில்
ஏறி இறங்குகிறாள் கிழவி ஒருத்தி...
இருக்கிற கருப்புப் பணத்தில்
கல்லூரி,கல்யாண மண்டபம் என்று
கட்டுகிறார் அமைச்சர் ஒருவர்..
ஈழப் பிரச்சனை,மீனவர் பிரச்சனைக்காக
தீக்குளிக்க தயாராகிறார் ஒருவர்..
பரபரப்பான முதல் நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கிடையே
ஒருவர் மட்டும் தனியாக எழுந்து சென்று
ஜூஸ் குடித்துவிட்டு வருகிறார்...
எவ்வளவு கொடுத்து வேண்டுமானாலும்
அந்த நகரின் பெரிய பள்ளியில் சீட் வாங்குவதற்கு
அதிகாலை நாலு மணியிலிருந்து
க்யூவில் நிற்கிறார் அப்பா ஒருவர்..
நகராட்சி பள்ளியில் மகனை சைக்கிளில் இறக்கிவிட்டு
ஆசையாய் வாங்கிய முத்தத்துடன்
வயக்காட்டு வேலைக்குக் கிளம்புகிறார் இன்னொரு அப்பா...
வேலை கிடைக்காத விரக்தியில்
தற்கொலைக்கு முன்
தன் பெற்றோருக்கான தன் ப்ரியத்தை
கடிதத்தில் வரைந்துவிட்டுப் போகிறான் ஒருவன்..
பெரிய இடத்து சிபாரிசில் வேலைக்குச் சென்றவனுக்கு
அதற்குப் பிறகு வேலை இல்லாதவனைப் பற்றி
நினைப்பதற்கு நேரம் இருப்பதில்லை...
காலில்லாமல் கையேந்துபவரை
ஆண்ட்ராய்டு போனில் ஆங்கிரி பேர்டு விளையாடியபடி
கடந்து போகிறான் ஒருவன்...
கிடைக்கிற இரண்டு நாள் விடுமுறையிலும்
அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லங்களுக்குச் சென்று
தன்னால் இயன்றதைச் செய்கிறார் ஒருவர்..
தன் குடும்பத்தில் யாரும் அப்படி பிறக்காததால்
பார்க்கிற இடங்களிலெல்லாம்
திருநங்கைகளை ஒம்போது என்றே
அழைக்கிறார்கள் அனைவரும்...
மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு மத்தியிலும்
அரசாங்க வேலைக்குச் சென்று
நம்பிக்கை தருகிறார் இன்னொரு திருநங்கை...
போதும் என்று கடற்கரையில்
உடல் சலித்துக் கிளம்புகிறது
காதல் ஜோடி ஒன்று...
இழந்துவிட்ட உண்மைக் காதலை நினைத்து
இளையராஜா பாடலை
இன்னொரு முறை ரிபீட் செய்கிறான் ஒருவன்...
அந்த பறவைகள்
மொத்தமாக குடியிருந்த அந்த ஒரு மரமும்
மேம்பாலம் கட்டுவதற்காக வெட்டப்பட இருக்கிறது..
அழிந்துவிட்ட சிட்டுக்குருவி இனத்தைப்பற்றி
டிஸ்கவரி சேனலில் தன் பேரனுக்கு
விளக்கிக் கொண்டிருக்கிறார் ஒரு தாத்தா 2020ல்...
இருக்கிற ஒரு செண்ட் நிலத்தையும் விற்றுவிட்டு
பிழைப்பு தேடி நகரத்திற்கு வருகிறார்
விவசாயி ஒருவர்..
சோத்துக்கு இப்போதைக்கு வழி இருப்பதால்
அக்குவாபினா குடித்தபடி ஆடி காரில் பறக்கிறார்
தொழிலதிபர் ஒருவர்...
பெட்ரோல் விலை ஏறியதைப் பற்றி வருத்தப்பட்டுக் கொண்டே
குவார்ட்டர் விலை ஏறியதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல்
வாங்கிக் குடிக்கிறார் ஒருவர்..
குடித்தே இறந்த அப்பாவைப் பற்றி நினைக்காமல்
“நான் படிக்கல,மில்லு வேலைக்குப் போறேம்மா”
என்கிறான் அம்மாவிடம் மகன் ஒருவன்...
உடைந்து வரும் கண்ணீரை
யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொள்கிறாள்
பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒருத்தி...
ஒன்பது பேரை கற்பழித்துவிட்டு
பத்தாவதாக யார் கிடைப்பார்கள் என்று
அலைந்து கொண்டிருக்கிறான் ஒருவன்..
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
டி.வி.யில் சன் மியூசிக்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்(றோம்) நான்( ம் )...!!!
** ஆனந்த் தமிழ்**
எம்.இ இன்ஜினியரிங் டிசைன்..