இடித்துப் போடுங்கள்
110 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோலாலும்பூர் விவேகானந்தர் ஆசிரமம் இடிக்கும் சதி, தூற்றி பாடியது....
இடித்துப் போடுங்கள்!
இடித்துப் போடுங்கள்!
சரித்திர சுவடழித்து
சாதனை செய்யுங்கள்
இருக்கும் அனைத்தையும்
எங்கள் மனத்தையும்
இடித்துப் போடுங்கள்!
வளர்ச்சியின் மோகமா?
வக்கிரத் தாகமா ?
இருக்கும் தடயங்கள்
இடித்து எழுப்பிட
அவசியம் வந்ததன்
அடிப்படை என்ன ?
இடித்துப் போடுங்கள்!
இந்தியர் நாங்கள்
இளித்த வாயர்கள்
சிந்தனை இல்லா
சிறுபான் மையினர்கள்
சொந்தமாய் அதனை
சுகமாய் நீங்கள்
இடித்துப் போடுங்கள்!
மந்திரி சொல்வதால்
மனம் கலங்காதீர்
தந்திரம் தொடர்க !
தடைகளே இல்லை
மனங்கள் கொன்றே
பணங்கள் சேர்க்கலாம்
இடித்துப் போடுங்கள்!
மேம்பாடு செய்வதற்கு
வேறொன்றும் இங்கில்லை
வீம்போடு விரைவாக
வேகமாய் இடியுங்கள்
வெறும் சின்னந்தானே
வேண்டிய தில்லை
இடித்துப் போடுங்கள்!
பசித்திரு தனித்திரு
விழித்திரு என்றவர்
திசைதொறும் ஞானம்
தேடி மகிழ்ந்தவர்
விவேகானந் தராவது ?!
விழிப்புணர் வாவது ....
இடித்துப் போடுங்கள்!
இருக்கும் அனைத்தையும்
எங்கள் மனத்தையும்
இடித்துப் போடுங்கள்!