எப்போது தொலைத்தேன்
எப்போது தொலைத்தேன்
பால்யத்தை
கிறுக்கிய கையெழுத்தும்
தவறிய வார்த்தையிலக்கணமும்
சரியாகிய போதா
புத்தக மயிலிறகு குட்டியிடாதெனும்
நிசமும் பாட்டிகதை பல
உண்மையும் உரைத்த போதா
சன்னலோர இருக்கைச்சண்டையும்
புகைவண்டி தடத்தில்
காந்ததேடலும் நின்ற போதா
வகுப்பினில் ஆண் பெண்ணென
தனியாய் அமர்த்திய போதா
பேருந்தின் இருக்கைகள் பெண்
இருக்கை என அமர தடுத்த போதா
எப்போது தொலைத்தேன்
பால்யத்தை
தோழியின் தோள்சாய தடைகள்
நுழைந்த போதா இல்லை
கன்னம் கிள்ளி சிரிக்கும்
கன்னியர் நிறுத்திய போதா
முழுக்கைசட்டை வாங்கி
முழங்கை வரை மடக்கிய போதா
பல்துலக்கும் குச்சியும் பற்பொடியும்
பரிணாமம் கண்டபோதா
பிடிவாத குணம் தொலைந்தபோதா
பிடித்தம் எதுவென உணர்ந்தபோதா
நாயகன் மறைந்து நாயகி தோன்றியபோதா
கன்னி கடைக்கண் பார்வை வீசியபோதா
எப்போது தொலைத்தேன்
பால்யத்தை
தொலைந்ததும் தெரியவில்லை
தொலைத்ததேனென புரியவுமில்லை
என்றாவதொருநாள் வார்தையிலல்ல
வாழ்வினில் திரும்பிச்செல்ல ஆசை
வாழ்வின் தேடலில்
தொலைத்தலின் காரணமறிய
# பயமறியான் #