காதலும் காமமும்
காதலும் காமமும்.
இரு பத்தைந்தில் தொலைத்த என்னை
அறு பத்தைந்தில் தேடுகிறேன்—அவள்
கரு விழிஓரம் சுருங்கிய வரிகள்.
எழுதும் கவிதை புரிகிறேன்.
ஒரு பத்தைந்தில் ஊறிய புதுமை
இரு பத்தைந்தில் தேறிடுமே--.முதுமை
அறு பத்தைந்திலும் ஆறாது இளமை
பல பத்தைந்திலும் வாழ்ந்திடுமே!!
பிறவிக் குருடர் புறமென்ன அறியார்
அறிவால் அறிவார் உள்ளம்—உண்மைக்
காதலும் குருடே கண்களில் அழகே
காதல் உருவம் ஒன்றே!
இரு மனந்தேர்ந்து ஒருநிலை இணைவில்
உருகச் சேர்ந்தது காதல்—அது
பெருகும் பண்பில் இருகும் அன்பில்
பருகும் இன்பம் காதல்.
காதலின் உச்சம் காமம் என்பார்.
காமம் மெச்சும் காமுகர்—அந்தக்
காதல் எல்லாம் காதல் அல்ல
கட்டுடல் மேயும் மோகமே!.
காதலுக் கென்ன வயதுண் டென்று
கந்தன் சொன்னான் பாடம்—அன்பு
மோதலுங் கூட காதல் என்றே
முடித்தான் பொய்மை வேடம்.
காதலும் காமமும் கலவை தானது
சேர்மம் அல்ல நிலையிலே—மோகக்
காமம் என்பதொரு காலம் மட்டும்
காதல் வாழ்வதோ உயிரிலே.
கொ.பெ.பி.அய்யா.