நாளைய சமுதாயம் - போட்டிக் கவிதை - தேன்மொழி

நாளைய சமுதாயம் - போட்டிக் கவிதை - தேன்மொழி
---------------------------------------------------------------------------------

இன்றைய நிலையை
இமைக்கு வெளியே எரித்து விட்டு
அறையினுள்ளே அழுது தீர்த்தால்
அடுத்த நாள் அர்த்தமற்றுப் போகும்

மதுவின் கொடுமையை
மங்கையர் மனதோடு புதைத்து விட்டு
மதுக்கடையைத் தடுக்காமல் விட்டால்
நமது பிள்ளையும் பிழையாய் போகும்

கல்வியின் தேடலை
விரும்பும் விரலில் மலர விடாமல்
வியாபார நோக்கில் விண்ணைத் தொட்டால்
விழிப்புணர்வு முழுதாய் விலகிப் போகும்

சாதியின் பெருமையை
சட்டம் சரியாய் சரிக்காமல் விட்டு
தெருவின் சுவரில் விளம்பரம் செய்தால்
மழலை மனமும் மட்கிப் போகும்

பிள்ளையின் வாழ்வில்
பெற்றோரின் விழிகள் - தவறையே பார்த்து
குற்றத்தை மிகையாய் மிரட்டிச் சொன்னால்
எதிர்காலம் வளர்ந்துப் பகையாய் நிலைக்கும்

விடியும் நாளையின்
பயணத்தில் போகாமல் - சோம்பலை திணித்து
ஓடையின் துளிப்போல் ஒதுங்கி உதைத்தால்
பாதங்கள் வெடித்து தாகத்தில் தவிக்கும்

விவசாயத்தின் அவசியத்தை
மனிதனின் மடமை - பசியோடு உணராமல்
பணத்தையே உயிராய் விரட்டிச் சென்றால்
உடலுக்கு உணவாய் புழுதான் மிஞ்சும்

மனிதத்தின் மகத்துவத்தை
துடிக்கும் இதயம் - முழுதாய் மறந்து
நடிக்கும் உலகில் அன்பை மறைத்தால்
உணர்வும் முடங்கி உலகமே வெறுக்கும்

வளரும் கலையை
வளர்ப்பிறையாய் பாராமல் - வசதி வைத்து
அசிங்கத்தில் நனைத்து அமுதம் என்றால்
அரியணை உடைந்து அமிலம் தெளிக்கும்

நாளைய சமூகமும்
நமதென அறியாமல் - சுயநல வழியில்
கருணை மறந்து சுகமாய் திரிந்தால்
கனவுகள் களைந்து கவலையே முளைக்கும்

--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு

எழுதியவர் : தேன்மொழி (9-Nov-14, 2:54 pm)
பார்வை : 275

மேலே