கலி முக்தி
இதயத்துள்
கொப்பளித்துக் கூத்தாடும்
குருதிக் குமிழ்களில்
பொய்யுரை பிழைக்கும்
உதடுகளின்
அசட்டுப் புன்னகை
வேலிகள்....
எதிலும்
ஏமாற்றுக் கலப்படங்கள்
எங்கும்
மனிதர்களென்ற போலியில்
வஞ்சகப் புகைப்படங்கள்...
உடை படியும்
தூசுகளாய்
உதறப்படும் உறவுகள்
கடை கொள்ளும்
விலைப் பட்டியல்களாய்
பாசாங்குச் சலுகையில்
பஞ்சம் தீர்க்கும்
வணிக நாடகங்களென
அசைவ நாற்றத்தில்
பூந்தளிர் மலர்த்தும்
புண்ணிய கோடிகள்....
மாண்டபின்
எதுவும்
வருவதில்லைக் கணக்கோ...?!