எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் -கடைசி பாகம்ஆறு -கவிஜி

அந்த பையனின் முகம் சத்யாவை நினைவு படுத்துவதைத் தடுக்கமுடியவில்லை கார்த்திக்காவுக்கு
அருவி..... இன்னும் வேகமாய் பாய்ந்து கொண்டிருந்தது......
வேறு வழியில்லை .... முகமூடியை எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.... ஆனால் உயிர் போனால் வராது...... உடம்பும் தான்........கார்த்திக்காவின் பதற்றம்.... இப்போது கொஞ்சம் குறையத் தொடங்கியது..
முகமூடியைக்
கழற்றிய ...........................................




சந்தோஷ் (தூர தேசம் செல்லும் பறவை ஒன்று சிறகடிப்பதை கணம் ஒன்று நிறுத்தி கண்கள் கூராக்கிப் பார்த்து விட்டு பறந்தது.....)



மெல்ல
மெல்ல
அந்த
பையனை
மேலே
தூக்கினார்.......
அருவியின் சத்தம் இப்போது சப்தமாக கேட்டது.... சற்று தள்ளி வந்து அமர்ந்தார்கள்.... மூவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.. அர்த்தம் மாறிக் கொண்ட பார்வை அது... காட்டின் கதை பேசும் இலைகள் உதிர்ந்துக் கொண்டே இருக்க.. சல சல நீரோட்டம்...உலக நியதியை பறை சாற்றிக் கொண்டு போனதாக தோன்றியது சந்தோஷ்க்கு....
மேகம் மெல்ல தன் நிறத்தை மாற்றிக் கொண்டிருந்ததில் மேல் நோக்கி பார்த்த சந்தோஷ்... ஏதோ பாதையை தவற விட்ட மைல்கல்லாய் மேல் நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தார்.

யார் சார் நீங்க...?................................யார்டா நீ..........?

ஒரே எண்ணம் வெவ்வேறு கேள்வியாய்..... வெவ்வேறு திசையில்....

யார் சார் நீங்க....? என்று கேட்டது கார்த்திக்கா....

யார்டா நீ...? என்று கேட்டது சந்தோஷ்....

அந்த சிறுவன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்..........
உடல் நடுங்கிக் கொண்டிருந்த சிறுவனுக்கு தலை துவட்டிக் கொண்டிருந்த கார்த்திக்கா ...."ஹெலோ சார்....உங்களைத்தான்.. எதுக்கு என்னைக் கடத்திட்டு வந்தீங்க..." -என்றாள். கண்களில் கொதித்துக் கொண்டு இருந்தது..... கேள்விகள்.........

"மழை வரத் தொடங்கிய நேரத்தை காலம், வானமாய் விரித்துக் காட்டியது சந்தோஷின் பார்வையில்......வந்ததும் துளி சொல்லும் சிறகுகளில்,பார்வையை நாலாபுறமும் சிறகடிக்க விட்டார்.......சிறகடித்த தந்திரம், மனம் கொண்ட பால்வெளியோடு... சிறகற்ற தேசத்தில் உருளும் பூமிப் பந்தின்.... திசைகளோடு சற்று வியக்கத் தான் செய்தது.....திசைகளற்ற ஆள் மனதிற்குள் அந்த சிறுவன் பூ நடுகிறானோ என்ற சந்தேகத்தில்....
அவளை அர்த்தத்தோடு பார்த்த சந்தோஷ், "ஹே..... கார்த்தி..... என்ன நிஜமா தெரியலையா....?" என்று சிறு புன்னகையில் கேட்டார்...

"ஆமா இவரு....சுபாஷ் சந்திர போசு.... பார்த்ததும் தெரியறக்கு.... கடத்திட்டு வந்துட்டு காட்ட வேடிக்கை காட்டறயா...?",என்றவள் மீண்டும் பொரிந்து தள்ளினாள்..."நீ கடத்திட்டு வந்து பணம் பறிக்கற ஆளா.... இல்ல பணம் பறிச்சிட்டு கடத்தற ஆளா?......முகமூடி வேற.. "

வேகமாய் வந்து விழுந்த பதிலை சிரித்துக் கொண்டே எடுத்துக் கொண்ட சந்தோஷ்,
"அயோ அயோ......ம்ம்ம்...... கார்த்தி,...... நான் சந்தோஷ்.... உங்க அண்ணா....."-என்றார்... புன் முறுவலுடன்...
சற்று கணம் ஸ்தம்பித்து நின்ற கார்த்திக்கா.... உணர்வுக்குள் திரும்பி நின்று.. "ஹே..... ஆமா.. இப்போதான் முகம் நினைவுக்கு வருது.. உங்கள, உங்க ப்ரோபைல் போட்டோல பாத்துருக்கேன்..... ஆனா போட்டோ, லாங் சாட்லதான் இருக்கும்.. அதுதான் சட்டுன்னு கண்டு பிடிக்க முடியல.. ஆமா எதுக்குண்ணா இந்த முகமூடி....என்னை ஏன் கடத்திட்டு வந்தீங்க... எனக்கு ஒன்னும் புரியல..." என்றாள்... விட்டால் இன்னும் கேள்விகள் கேட்பாள்... பதில் வேண்டிய கேள்விக்கு முன் பதில் ஒன்றுமேயில்லை... என்பதாக ஆவலுடன் சந்தோஷ் முகத்தையே பார்த்தாள்...

"அது வேற கதை... அப்புறம் சொல்றேன்... என்ன நம்பு.. ப்ளீஸ்.....இப்போ இந்த பையன் யாரு என்னனு பாப்போம்....என்ற சந்தோஷ்... அந்த சிறுவனைப் பார்க்க.... சிறுவன்.... சட்டென அவர்களின் கையைப் பிடித்து பின்னால் இருக்கும் மரத்தின் பின்புறம் இழுத்துக் கொண்டு ஓடினான்.. அவனின் முகம் "அமைதியாய் இருங்கள்" என்பது போல ஜாடை காட்டியது.. இருவரும் ஒன்றும் புரியாமல்..... "என்னடா" என்று அவனைப் போலவே ஜாடையில் கேட்க..

மழை கொட்டத் துவங்கியது....

காட்டுக்குள் அரிசியை இரைத்தார்போல பொல பொலவென.. புதுப் பூ தூவிக் கொண்டிருந்த மழையில்.... புதிதாய் நனைந்தபடியே சிறுவனின் ஜாடைக் கேற்ப அப்படியே மரத்தினடியில் இருந்த செடி மறைவில் அமர்ந்தார்கள்... முன்பு அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில் இப்போது ஏதோ சல சலப்பு, நீரின் சத்தத்தையும் மழையின் சத்தத்தையும் தாண்டி வர... மெல்ல தலையைத் தூக்கி எட்டி பார்த்தார்கள் மூவரும்....

நான்கு பேர், பத்து சிறுவர்களை மரத்துண்டுகளை தூக்க சொல்லியும்... "அந்த இடத்தில் போடு.. இப்படி போடு.." என்று யோசனை சொல்லிக் கொண்டும், வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள்..... மழை... அவர்களை ஈரமாக்கி ஈரமாக்கி ஊற வைத்தது போல வெளுத்திருந்தார்கள்.... ஒல்லியான தேகத்தில்.. கண்கள் மட்டும் இரை(றை) தேடும் ஆந்தையின் வெளியை வெறித்திருந்தது போல...அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே, கஷ்டப்பட்டு தன் உடல் பலத்தையெல்லாம் திரட்டி மெல்ல அருவிக்குள் மரத்துண்டுகளைத் தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருந்தார்கள்.... அனைவருக்கும், வயது இருந்தால் 8லிருந்து 13க்குள் தான் இருக்கும்....

சந்தோஷ்க்கும், கார்த்திக்காவும் ஒன்றும் புரியவில்லை... கூட நடுங்கிக் கொண்டிருந்த சிறுவனை ஒருசேரப் பார்த்தார்கள்....அவன் விழிகளில்... கண்ணீர் வெள்ளை ரத்தமென வந்திருக்க வேண்டும்... அவன் வாய்.. முணங்கிக் கொண்டே குளிரில் நடுங்கியது....

சந்தோஷின் பார்வைக்கு அர்த்தம் புரிந்த சிறுவன்... "எங்கள பத்தாயிரம் ரூபாய்க்கு 2 வருசத்துக்கு வாங்கிட்டு வந்துட்டாங்க... தினமும்.. இப்டி தான்.. மழை வெயில் பனி எல்லாமே எங்களுக்கு ஒண்ணு தான்....இந்த மரத்த வெட்டி வெட்டி போடுவாங்க.. நாங்க தூக்கிட்டோ உருட்டிட்டோ வந்து இங்க இருந்து இந்த அருவில தூக்கிப் போடணும்.... இங்க வந்து ஆறு மாசம் ஆச்சுண்ணே.. ஒரு நாள் கூட லீவு இல்ல... எப்பவும் புளி சாப்பாடு தான்....அதுல, அங்க தெரியறான் பாருங்க.... அவன் பேரு சிவா.. எங்கள்ல அவன் தான் மூத்தவன்... ஆனா கொஞ்ச நாளா அவன் புள்ள மாதிரியே பேசறான்.. பழகறான்.. அவன மட்டும்... இந்த தடியனுங்க... காட்டுக்குள்ள வேற இடத்துக்கு அப்பபோ கூட்டிட்டு போவானுங்க.. அவன் திரும்பி வரும் போது உடம்புக்கு முடியாம வருவான்....எங்கள எப்டியாது கூட்டிட்டு போய்டுங்கண்ணே.... பயமா இருக்கு.... இந்த காட்ல பேய் வேற இருக்காம்......... எனக்கு எங்கம்மாவ பாக்கணும்ண்ணே....எங்கப்பாவ ஜெயில்ல போட்டுட்டாங்க.. ஏன்னே தெரியல...... அதான் எங்க அம்மா என்ன இங்க அனுப்பிடுச்சு... எனக்கு ஒரு தங்கச்சி இருக்குண்ணே..அத பாக்கணும் போலயே இருக்கு... செத்துருவோம்னு பயமா இருக்குண்ணே........."என்று ரகசியமாய் முணு முணுத்தவன்... அப்படியே சரிந்து சந்தோஷின் கால்களில் விழ... பதறிய சந்தோஷ்.. அவனை எழுப்ப இன்னும் குனிய.. அந்த சிறுவனின்.. முதுகில் கிழிந்து தொங்கிய சட்டையின் வழியே... காயங்கள் கன்னிக் கிடப்பது தெரிந்தது...அப்படியே அந்த சிறுவனை அனைத்துக் கொண்ட....சந்தோஷ்...ன் கண்களில் சிவப்பு ரத்தம்....

கார்த்திக்காவின் கண்கள் கலங்கி நின்றன...

"இப்போ என்ன பண்றது அண்ணா.... கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கேட்ட கார்த்திக்காவை அர்த்தத்தோடு பார்த்தார் சந்தோஷ்....

"போய் பேச போறீங்களா....?"

"நாம் என்ன ஆய்தம் எடுக்க வேண்டும் என்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.... " என்று கூறிய சந்தோஷின் கையில் இப்போது அருகினில் கிடந்த கட்டை.... லாவகமாக வசதியாக பிடித்துப் பார்த்துக் கொண்ட பின் எழுந்தார்.... "இங்கயே இருங்க......." என்றபடியே முகமூடியை மீண்டும் எடுத்து மாட்டினார்.....

"இது எதுக்குன்னா...?" என்றாள் கார்த்திக்கா...

"இது அவுங்களுக்கு...." என்றபடியே....திபு திபுவென அந்த தடியன்கள் அருகில் சென்று சரமாரியாக தாக்கத் தொடங்கினார்....

மழை கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டிருக்க... சந்தோஷ்....உடல் பலம் மன பலம் இரண்டையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து... இடியாக இறக்கிக் கொண்டிருந்தார்....

அடி.. வெளுத்து வாங்க.... ஒருவனுக்கு இடது கையில் தொடர்ந்து அடித்த அடியில் காடு அலறியது..

சிறுவர்கள் பயந்து என்ன நடக்கிறது என்று புரியாமல் தடுமாற, அதற்குள் கார்த்திக்கா அவர்களை அவசரமாக கூட்டிக் கொண்டு மரத்தினடியில் வந்து நின்று, இனம் புரியாத பயத்தைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்...

சிறுவர்கள் கண்களில்.... அனல் தெறிக்கும் கண்ணீர்.....

"அண்ணே.... அவுனுங்கள அடிச்சு கொல்லுங்கண்ணே....எங்கள எத்தன தடவை மாத்தி மாத்தி அடிசிருக்கானுங்க... அடிங்கண்ணே.. அடிங்கண்ணே.." என்று கிடைத்த கல்லைத் தூக்கி தூக்கி தடியன்களைப் பார்த்து வீச....... அதற்குள் சந்தோஷ்.. இன்னொருவன் மண்டையைப் பிளந்து விட்டு, அடுத்தவனின் காலில் தொடர்ந்து இருபது அடிக்கு மேல்... அடித்து விட்டு .. அடுத்தவனின் முதுகில்.... கட்டையின் முனையால் சராமாரியாக குத்த... அடி வாங்கியவர்கள்..... ஆளுக்கொரு திசையில்... சுருண்டு விழ....ஆரண்யம் மிரண்டது... வெறி பிடித்த மனிதனின் மூர்க்கம்.... தப்புக்களை பார்த்து பார்த்து..அடக்கி அடக்கி வைத்த பொறி.. காட்டு தீயாக வெளிப்படும் போது நிஜமாகவே காடு கொள்ளாத அதிர்வுகள்.....

பெரு மூச்சு வாங்க நின்று கொண்டிருந்த சந்தோஷ்... ஆழமாய், காட்டையும் சிறுவர்களையும் பார்த்தார்... மெல்ல அவரின் அருகே சென்ற கார்த்திக்கா.. பேசத் தொடங்கினாள்....

"அண்ணா.. உங்களுக்கு ஒண்ணும் இல்லையே.... சீக்கிரம் இங்க இருந்து கிளம்பிடலாம்.. இந்த பசங்க ஊர் இங்க தானாமா.... இந்த மலை அடிவாரத்துல இருக்கற புதுப்பதிங்கர மலை கிராமமாம்.. அங்க போய் இவுங்கள விட்டுட்டு சீக்கிரம் கிளம்பிடலாம்.. மழை வேற... ஆமா, ,......
இப்பவாது சொல்லுங்க அண்ணா.. அது என்ன கதை..." என்றாள்... கார்த்திக்கா.... -அவள் முகத்தில் மழை நீரைத் தாண்டி, ஆர்வமும்... ஒரு எழுத்தாளனின் கோபத்தை தெரிந்து கொள்ளும் அனுபவமும், ஆச்சரியங்களை துளி துளியாய் நிறைத்துக் கொண்டிருந்தது....

" என்ன அடி..." மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.....

மழை அவர்களை விட்டபாடில்லை.. அவர்களும் மழையையும் விட்டபாடில்லை ...

சண்டையிட்டு களைத்துப் போன... சந்தோஷ்... மழை வரும் திசை நோக்கி அண்ணாந்து பார்த்தபடியே.... "அந்தக் கதை எறும்புக் கதை என்றார்...."தீர்க்கமாக.

"எறும்புக் கதைன்னா.....?"-என்று சற்று யோசித்த கார்த்திக்கா.. "நாம எழுதின தொடர்கதையா.....!"-என்று வார்த்தைகளை இழுத்தா...........ள்

"அதே எறும்புக் கதைதான்..... இன்னும் சொல்லப் போனா, இங்க நாம நிக்கறதும்....... நான் உன்னைக் கடத்தினதும் கூட எறும்புக் கதை தான்...." -விடுகதைக்கான விடையை மழையோடு சேர்த்து சிதறினார் சந்தோஷ்....

"புரியலையேண்ணா!!!!........"-

கார்த்திக்காவின் கண்களில் இருந்த மிரட்சி.... இப்போது கேள்விகளால் வேலியாக்கப் பட்ட...மின்சாரமாய்.. அதிர்ந்து கொண்டிருந்தது...... காடெங்கும்... உள்ள மரங்கள்... தலை ஆட்டி கண்கள் உருட்டுவதாகப் பட்டது...
சிறுவர்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு..... ஒரு வித சந்தோஷ தவிப்புகளில் மழையில் நனைந்து கொண்டு இருந்தார்கள்....மிரண்டு போய் ஓடிக் கொண்டிருந்தது.. அருவியை நோக்கிய ஆறு......

"போக போக புரியும்... முதல்ல இந்த பசங்கள் கூட்டிட்டு இங்கிருந்து கிளம்பனும் ...."-என்று சொல்லி மறுபடியும் முகமூடியை எடுத்து மாட்டினார். அவரின் மனதுக்குள், இருக்கும் இன்னொரு வேலை பற்றிய எண்ணமும் ஓடிக் கொண்டிருக்க.... ஆழமாக அவர்களைப் பார்த்தார்.........

அவர்களும்... நன்றியோடு கண்கள் கலங்க கை கூப்பி நிற்க.. கண நேரத்தில் அது நடந்தது... அடிபட்ட ஆட்களில் ஒருவன்.... மின்னல் வேகத்தில் எழுந்து ஓடி வந்து சந்தோஷை வயிற்றோடு முட்டி அருவியின் பக்கம் சரிக்க, எதிர் பாராத நேரத்தில் தடுமாறிய சந்தோஷ் உருண்டு புரண்டு கொண்டே, பிடி கிடைக்காமல் தடுமாறி... இரைச்சலோடு இரைச்சலாக அருவியின் ஓரம் செல்ல, மரணம் தேடும் கைகளில்.... அதே மரத்தின் வேரில் ஒரு பகுதி தட்டுப் பட....அதைப் பிடித்துக் கொண்டு....

...நீரோடு நீராக போவதற்கான முந்தைய கணத்தை போராடி வெற்றி பெற தடுமாறிக் கொண்டிருந்ததில்... கார்த்திக்காவும் சிறுவர்களும் என்ன செய்வதென்ற தெரியாமல்.. திகைத்து நின்றனர்.... அனைவரும் மாறி மாறிக் கத்திக் கொண்டே, அந்த தள்ளி விட்ட தடியனை ஒரு சேர தள்ளி விட, அவன்.. அருவியோடு அருவியாக பாதாளத்தில் விழுந்து காணாமல் போனான்...

கையை சந்தோஷ் கொடுத்துப் பார்த்த கார்த்திக்கா, அது முடியாமல் போக இடைவெளியில் பயம் திக் திக் என்று துடித்துக் கொண்டிருந்தது...சந்தோஷ் தொங்கிக் கொண்டிருக்கும் இடத்திற்கு கண்டிப்பாக போக முடியாது...ஆற்றின் வேகம் வேறு அதிகமாகிக் கொண்டே இருக்க.... மழை இன்னும் வேகமாய் பெய்து கொண்டிருந்தது..

கண்களை தொடர்ந்து திறந்து வைப்பதே சிரமமாக இருந்தது....நிற்கும் இடம் கூட மண் அரிப்பால் கீழே இறங்கிக் கொண்டிருக்க.. அதற்கு மேல் கார்த்திக்காவால் முன்னேறி செல்ல இயலவில்லை... சிறுவர்கள் ஒ வென கத்தத் தொடங்கினார்கள்........மழை.... பெரு மழை ஆனது....சந்தோஷ் தொங்கிக் கொண்டிருக்கும் இடம் கூட.. மழைத் துளிகளின் போர்வையில் மறையத் தொடங்கின...

சந்தோஷ், வேரின் பிடியில் இருந்து தன் பலத்தை இழந்து நழுவத் தொடங்க....

சட்டென யோசித்த கார்த்திக்கா.. தன் துப்பட்டாவை கழற்றி.. சிறுவர்களின் சட்டையையும் கழற்ற சொல்லி...ஒன்றோடு ஒன்றாக முடிச்சு போட்டு ..... ஒரு முனையை மரத்தின் கிளையில் போட்டு பிடித்துக் கொண்டு மறு முனையை வேரைப் பற்றிப் போராடிக் கொண்டிருக்கும் சந்தோஷின் கைகளில் படும் படி போட்டார்கள்....

மழையின் வேகம் அதிகமானது....வேகத்தின் பிடியே மழையானது...

கிடைத்த பிடியை சந்தோஷ் பிடித்துக் கொள்ள...மறுமுனையை கார்த்திக்காவும் சிறுவர்களும் பிடித்துக் கொள்ள... உயிர் தேடும் போராட்டம் மேலும் கீழும் வந்து போய்க் கொண்டிருக்க.. சட்டென கார்த்திக்கா பிடித்திருந்த சட்டை, பாரம் தாங்காமல் கடைசி முடிச்சை அறுத்துக் கொண்டு கையோடு வந்து விட... எதிர் முனையில் சந்தோஷ் கீழ் நோக்கி விழத் தொடங்கினார்.... அருவிக்குள்......


இனி...........

கவிஜி

எழுதியவர் : கவிஜி (11-Nov-14, 5:29 pm)
பார்வை : 173

மேலே