மெளனமாய் ஒரு பூகம்பம் - 2 - சந்தோஷ்
அந்த நூலகத்தில் வாசுதேவனுக்கு எதிர் இருக்கையில் வாசகியாக புதுவாசத்தை தந்த அந்த விழியழகி ஏதோ ஒரு பார்வைதென்றல் தொட்டு செல்வதை உணர்ந்தவளாக படபட என்று பட்டாம்பூச்சியாக்கினாள் தன் விழி இமைகளை.. இமைத்த நொடிகளில் அவள் கையிலிருந்த புத்தகம் இடறி விழந்தது மேஜையில்.
முழுவதுமாய் தெரிந்த அந்த அழகிய முகத்தை கண்ட வாசுதேவன் இருதயத்தில் இரத்தவோட்டம் அதிகரித்து இருக்கும். சாயம் பூசாத செவ்விதழ். மையிடாத புருவம்.. சின்னதாய் கருப்பு பொட்டு. செல்லமாய் தொட்டுக்கொண்டிருக்கும் ஒற்றை முடி அவள் நெற்றியில்....! கார்கூந்தலில் இருவரியாய் ஒருமுழுப்பூவின் சிலமுழும் முன்னால் விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறது.
செக்க சிவந்தவள் அல்ல.. மாநிறமும் அல்ல.. இவள் ஒரு கருப்பழகி...!
புத்தகம் இடறி விழுந்ததால் “ ஒஓ ” என்று இதழை சுருக்கினாள். இவள் சுருக்கியதால் சுலுக்கியது வாசுதேவனின் மனது. மேஜையில் கிடந்த வைரமுத்துவின் “ கருவாச்சி காவியத்தை” தொட்டு எடுக்க முற்பட்டன இவன் கைகள். இவன் தொட்டு விடும் வினாடிக்கு முன் தொட்டுவிட்டது அவள் விரல்கள். தொடமுயன்று தொடாமல் விடுவது நியாயமில்லை. தொட்டுவிட்டு தொடர்பார்வை வீசினான் இவன். எச்சரித்து நச் பார்வை வீசுவாளோ என அஞ்சியது வாசுவின் மனம். அஞ்சியதுப்போல அல்லாமல் கெஞ்சியது அவள் விழிகள் சற்று குறுக்கி.. சற்று மேற்புருவமும் கீழ்புருவமும் நெருக்கி...!
அவள் விழிபேசியது... இவன் விழி கேட்டது.
இந்த மெளனம்...! இதே மெளனம்.. அந்த நிசப்தம்.. அதே நிசப்தம்...! மெளன நிசப்த்ததில் ஒர் அலைவரிசை உண்ர்வுவீச்சு உருவாகியது .
மீண்டும் கருப்பழகி கருவாச்சி காவியத்தை படிக்க ஆரம்பித்தாள். இயல்பாக...! இயல்பிலிருந்து தடம் மாறியது வாசுதேவனின் இதயம் தான்.. !
எல்லாமே ரசிக்க பழகிக்கொண்ட இந்த வாசுதேவன். ஒருமுறையாவது மன்மத ரசனையோடு ஒரு ரசனையான பெண்மையை ரசிக்காமல் இருக்கமுடியுமா?
அவள் பெயர் என்னவோ? கருப்பான தேகம்.. கலக்கான அழகு.. கம்பீரமான தோற்றம்.
பெயர் என்னவோ..! எப்படியான பெயராக இருக்கும்..! இதற்கு முன் வாசுதேவன் முகத்தில் மீசையரும்பும் போது முளைத்த கனவு கன்னியின் பெயராக இருக்குமோ ?
வாசுதேவன் கல்லூரியில் இளங்கலையில் படிக்கும்போது ஒருதலையாக காதலித்த முதுகலை மாணவியின் பெயராக இருக்குமோ..?
எந்த ஆண் மகனும் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எந்நிறத்திலும் ஓர் அழகு இருக்கிறது.. இந்த கருப்பு நிறத்தில் ஓர் அழகு உண்டு.. ஒரு திமிரு உண்டு.. இதை உணர்ந்து காதலித்தவன் நிச்சயம் ருசிப்பான் கருப்பின் சுவையினை. . ஆம் ! கருப்பின் சுவை, கரும்பின் சுவையை மிஞ்சும். இங்கு சுவை என்பது நாவில் தீண்டி உணர்வது அல்ல. விழியில் பருகி உணர்வது. அப்படி உணர்ந்துக்கொண்டிருக்கிறான் இந்த நாயகன். எதிரிலிருக்கும் அந்த விழியழகு நாயகியை...!
கருப்பான அழகி..! கூடவே மனம் கிறங்கவைக்கும் மல்லிகை வாசம்.. ! நூலகத்தின் ஜன்னலின் வெளியே சற்று வினாடிகளுக்கு முன் பொழியும் லேசான மழையினால் எழும் மண்வாசம். ம்ம்ம் வாசிக்க முடியுமா வாசுதேவனால் அவன் கையிலிருக்கும் “ மூன்றாம் உலகப்போர் “ புத்தகத்தினை.?
வாசுதேவனுக்கு ஆரம்பித்து விட்டது முதல் போர்..!
எங்கோ எப்போதோ அவளை பார்த்திருப்பதாக சட்டென்று பட்டது வாசுதேவன் புத்திக்கு ..!
இவள் பெயர் என்ன ? இவள் எங்கிருந்து வந்தாள் ?
வாசுதேவன் மூளை சிலநொடிகளில் பலகோணங்களில சில பழையநினைவுகளை கிளறிக்கொண்டே இருந்தது.
தீடிரென்ன வாசுதேவனின் உடலிலுள்ள மயிர்கள் கூச்செரிந்து செங்குத்தாய் கிளர்ச்சியடைந்தன.
இவள்............................. ????
இவள்.................................. ???
வாசுதேவனின் மூளையின் நினைவுகளில் ஆழத்திலிருந்து எழுந்தது அந்த பெயர்........................? அந்த பெயர் தான் இந்த கருப்பு விழியழகியின் பெயரா ?
இவள் தான் அவளா ? அவள் தான் இவளா ?
இவள் பெயர் “ கற்பனா” ...!!
[ தொட~ ட~ரு~ம் ]