===+++கையை கடித்த காசு - சிறுகதை+++===

மூனு மாசமா நாமளும் முயற்சி பண்றோம், அவ நம்மள திரும்பிகூட பாக்கமாட்டேங்குறா மச்சி, அவள எப்புடித்தான் மடக்குரதுன்னே தெரியலடா என்று அலுத்துப்போனவாரே சிவா கூற...
ஹேய்... அவ அழக பாரு மாப்ள, என்ன அம்சமா இருக்காடா, எவனுக்கு குடுத்து வச்சிருக்கோ என்று மதன் கூறினான்.
ஏய்... பங்கு, வெட்டியா பொலம்பிகிட்டு இருக்காம அவள மடக்குறதுக்கு எதாச்சும் உருப்படியான யோசன சொல்லுங்கடா என்று ரொம்ப காட்டமாக பேசினான் தேவா.
அட கிறுக்குப் பயலுங்களா இன்னும் எத்தன நாளைக்குதாண்டா இப்படி அவள பார்த்துகிட்டு நமக்கு நாமே பொலம்புறது? என்ன ஆனாலும் சரி, வாங்க நேர்ல போய் சொல்லிடுவோம். அவளுக்கு யார புடிச்சி இருக்கோ அவனுக்கு வாழ்த்து சொல்லிட்டு, நம்ம திட்டப்படி மத்தவங்க வெலகிடுவோம் என்றான் ரகு.
ஆமாண்டா, இதுக்குமேல என்னாலவும் பொறுக்க முடியாது, அவளை பாக்கும்போதே எனக்கு என்னென்னமோ பண்ணுதுடா, ஆனா அவ இதுவரைக்கும் ஒரு நாள்கூட நம்மள திரும்பி பார்த்ததில்லையே, குனிஞ்சதல நிமிராம வரா, தேவை இல்லாம யாரையும் எதுக்காகவும் நிமிர்ந்துகூட பார்க்கிறதில்ல, இவ என்ன இன்னும் கிமு லவா இருக்கா? இவளுக்கு என்னா கண்ணகி விருதா குடுக்க போறானுங்க? என்று சிவா மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான்.
இவர்கள் நான்குபேரும் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் நின்று மிகவும் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் நின்ற இடத்தில் இருந்து 7 அடி தூரம் தள்ளி யுரேகா நின்றுகொண்டு இருந்தாள், சிகப்பும் மஞ்சளும் கருப்பும் கலந்த வண்ணப் புடவையில் கண கச்சிதமாய்த் தன்னை ஒலித்து வைத்திருந்தாள்.
இப்பொழுது அந்த நான்கு பேர்களும் பேசிகொண்டது யுரேகாவைப் பற்றிதான் என்று நீங்கள் புரிந்துகொண்ட இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆம்... அந்த நான்கு பேர்களும் பேசிகொண்டதைப்போல் அவள் பேரழகிதான. பிரம்மனின் படைப்பு என்று எல்லோரும் சொல்கிறார்களே! இவளை படைக்கும்பொழுது பிரம்மன் மிக சிரத்தை எடுத்து இருக்க வேண்டும், அல்லது காதல் நினைவுகளில் இருந்து இருக்க வேண்டும். கூரீட்டிபோல் ஒளிபொருந்திய நயணங்கள். வெண்ணிலவை வெட்டிவைத்த நுதல். மாதுளம்பூ நாசி, கொடுக்காப்புளி போல் செக்க செவந்த செவ்விதழ்கள், கோர்த்து வைத்த வெண் முத்துச்சரங்களாய் பல்வரிசை, சங்கையொத்த மூங்கிளைப்போல் மென்மையான கழுத்து''. ''இரு கிளிஞ்சல்களை பொருத்தியதைப்போல் காதுமடல்கள்'', ''அமாவாசை இருளையும் ஆகாய முகிலையும் குழைத்து செய்த கார்குழல்'', ''இப்படி உடல் அவயங்கள் ஒவ்வொன்றும் அளவோட அழகாக அவளிடம் காணப்பட்டது,'' ''ஏற்ற தாழ்வுகளும் பள்ள மேடுகளும் அவளது வனப்பை கூட்டியது''. ''விக்கிரமாதித்தன் கதையில் உள்ள 32 பதுமைகளில், சௌந்தரவல்லிப் பதுமையையும், பூரணச் சந்திரவல்லிப் பதுமையையும், சற்குணவல்லிப் பதுமையையும் கலந்து ஒரு உருவம் செய்ததைப்போல் அனைத்து லட்சணமும் பொருந்தியவளாக இருந்தாள்'', ''இன்னும் சொல்லப்போனால் பொன்னியின் செல்வனில் உள்ள இளைய பிராட்டி குந்தவையைபோல் அறிவிலும், அழகிலும், அடக்க ஒடுக்கங்களிலும், வீரத்திலும் தலைசிறந்த தமிழ்ப் பண்பை தன்னகத்தே வைத்திருந்தாள் யுரேகா''.
இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று வியக்கும் அளவிற்கு அவள் இருந்தாள், தேவை இல்லாத பேச்சுகள் அவளிடம் எப்பொழுதும் இருந்ததில்லை, அர்த்தமற்ற சிரிப்புகளை அவள் அறவே வெறுத்தாள், பலரும் போற்றும் தமிழன்னை வாசுகியைப்போல் தன்னை சீர்திருத்திக்கொள்ள வேண்டும் என்பதே இவளது தலையாய விருப்பமாக இருந்தது.
தெரிந்தும் தெரியாமலும்கூட அவள் யார் மனதையும் நோகடித்ததில்லை, இந்த நவீன காலத்தில் அவள் தன்னை ஒரு புறநானூறு காலத்து பெண்போலவே வைத்திருந்தாள். அவள் தலைகுனிந்து நடப்பது அவளது தன்னடக்கம், ஆனால் அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் எந்த ஆணும் பைத்தியமாகித்தான் போவான்.
அவளது பணிவான குணம் ஒவ்வொரு ஆணையும் விரும்ப வைக்கும். ''ஆம்... ஒரு காதலன் இப்படி ஒரு பெண் காதலியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவான்.'' ஒரு கணவன் இப்படி ஒரு பெண் மனைவியாக இருக்க கூடாதா என்று நினைப்பான், ஒரு பெற்றோர்கள் இப்படி ஒரு பெண் தன மகளாக பிறந்திருக்ககூடாத என்று ஏங்குவார்கள், ஒரு அண்ணன் இப்படி ஒருப் பெண் தன தங்கையாக இருக்ககூடாத என ஆசைகொள்வான்.
யுரேகா சுற்றும் முற்றும் பார்த்தாள், அந்த நான்கு இளைஞர்களும் அவளையே பார்த்து பார்த்து இன்னும் பேசிக்கொண்டே இருந்தார்கள். பக்கத்தில் ஆண்களும் பெண்களும்மாக பலரும் பேருந்துகளுக்காக காத்திருந்தார்கள், யுரேகா தனது பார்வையை நாலாபுறமும் சுழற்றி சுழற்றி பார்த்தாள், ஆம்... அவள் யாரையோ தேடுகிறாள்.
''ஏனோ அவள் மனசு இப்பொழுது குறு குறுத்தது கொண்டிருந்தது, என்ன ஆச்சி'', ''ஏன் காணும் இன்னைக்கி'', ''ஒரு நாளும் வராம இருந்ததில்லையே என்று யுரேகா தனக்குள்ளவே முணுமுணுத்து கொண்டு இருந்தாள்''. வடம்பிடித்த பொன் தேர்போல் நிலுவையில் நின்றாலும் அவள் மனது மட்டும் யாரையோ தேடிக்கொண்டு இருந்தது, நேரம் ஆகா ஆகா அவளது தேடலும் தீவிரமானது.
சிவா, மதன், தேவா, ரகு இவர்கள் நான்குபேரையும் விட்டு அவள் ஐந்தாவதாக யாரையோ தேடிக்கொண்டு இருந்தாள்.
பாரிமுனையில் இருந்து வந்த பேருந்துகள் சேத்துப்பட்டு, கோயம்பேடு, ஆவடி, அம்பத்தூர் என சென்றுகொண்டு இருந்தன, யுரேகா பாரிமுனை செல்ல வேண்டி இருந்ததால் எதிர்த்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இருந்தாள், அவள் தினமும் வழக்கமாக செல்லும் பேருந்து நிறுத்தம் இதுதான்.
யுரேகாவின் எண்ண அலைகள் ஒருவாரான மனபாரம் கொண்டதாக தற்பொழுது இருந்துகொண்டு இருந்தது. இதோ கோயம்பேட்டில் இருந்து 15B ஈகா திரையரங்கு சாலைவிதி விளக்குகளை கடந்து சன்னமாக வருகிறது பாரிமுனை நோக்கி.
பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு தயாரானார்கள். பேருந்து வந்து நின்றது, சிவா மதன் தேவா ரகு இவர்கள் நால்வரையும் தவிர எல்லோரும் ஏறினார்கள், யுரேகாவும் தயங்கி தயங்கி சென்று பேருந்தில் ஏறினாள். அந்த நான்கு இளைஞர்களும் யுரேகாவை ஒவ்வொரு கணமும் உத்து உத்து பார்த்துக்கொண்டே இருந்தனர். யுரேகா பேருந்தில் ஏறும் முன்பு ஒருமுறை திரும்பி பார்த்தாள். பேருந்தில் ஏறிய பிறகு இரண்டுமுறை திரும்பி பார்த்தாள். அவள் திரும்பி பார்த்ததுதான் புதுமையிலும் புதுமை.
''ஆம்,''அந்த நால்வர் மனதிலும் இப்பொழுது பட்டாம் பூச்சிகள் சிறகடித்தன. டேய் மச்சான் அவ திரும்பி பார்த்துட்டாடா.
ஹேய்... ஆமா மாப்ள, ரொம்ப அதிசயமா இருக்குடா.
மூனு மாசத்துல இன்னிகிதாண்ட பங்கு மொததடவ திரும்பி பார்த்து இருக்கா.
ஐயோ அவ நம்ம நாலு பேருல யார பார்க்குறான்னு தெரியலடா,,,, நான்குபேரும் இப்படி மாத்தி மாத்தி பேசிக்கொண்டார்கள்.
பேருந்து நகர்ந்து சாலையை பிடித்துச் சென்றது, ஏம்மா ... எல்லோரும் சீட்டு வாங்குங்க என்று நடத்துனர் குரல் கொடுக்க. ''பேருந்து நிறுத்தத்தில் தினமும் பிச்சை எடுக்கும் முடமான கிழவிக்கு, வழக்கமாய் கொடுக்கும் ஒத்த ரூபாய் யுரேகாவின் கைகளை இப்பொழுது இன்னும் அழுத்தமாய் உறுத்திக்கொண்டே இருந்தது.''
-----------------------------நிலாசூரியன்.