தமிழ் முஸ்லிம்களும் பொங்கலும்3
எனக்கு என் குழந்தை பருவ நாட்கள் நினைவு வருகின்றன பொங்கல் பண்டிகை வருகையில் எனது கிராமத்தில் பல மாற்றங்கள் தென்படும் . விவசாய பின்புலம் கொண்ட எனது ஊரில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு வலம் வரும் . பொருள் சுமக்கும் மாட்டுவண்டிமுதல் ஆட்களை சுமக்கும் வில்வண்டி வரை அனைத்தும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் எனது ஊரில் எனது ஊரில் காய்கறிக்கடைகளில் குவிந்திருக்கும் மஞ்சள்.
சாலையோரங்களில் மரக்குவியல்களாய் குவிந்திருக்கும் கரும்பு . வீட்டில் குவிந்திருக்கும் மண் சாட்சி சொல்லிகொண்டிருக்கும் பனை கிழங்கின் வருகையை .பொங்கல் நாள் என்பது ஒரு சிறப்பான நாளாகவே காட்சி அளிக்கும் .
பொங்கல் படி வழங்கல், தாழியில்இருந்து மரக்காவில் விடைபெற்று கொண்டிருக்கும் அரிசியும் விளம்பல்களின் வரிசையில் நிற்கும் கூடவே வீட்டில் சமைத்த பொங்கலும் சுவை தந்து கொண்டிருக்கும் .
அப்போதெல்லாம் எனக்கு பின்வரும் காலத்தில் ஏன் இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை என்ற வினா எழுப்பப்படும் என்று தோன்றியதில்லை .
வெளியூர் பயண ஏற்பாட்டில்இருக்கும் மாமாவிடம் என் பாட்டி ஏம்பா கரிநாள் கழிச்சி போகவேண்டியதுதானே என்று அன்புடன் வினவுகையில் , இன்னும் தை பொறந்ததுக்கு அப்புறம் வா என வீட்டு வேலை செய்ய கொத்தனார் என்று அழைக்கப்படும் கட்டட கலையாளர்களை விளிக்கும் தருணங்களிலும் இன்னும் பல நிகழ்வுகளுக்கு தை மாதத்தை அடையாளப்படுத்தி செய்யப்படும் திட்டமிடல்களிலும் நான் ஒருபோதும் நினைத்ததில்லை பொங்கல் பண்டிகைக்கும் எனக்கும் இடைவெளி இருக்கும் என்று .
பொதுவாகவே பொங்கல் திருவிழா என்பது இஸ்லாமிய சமூக பின்புலங்களில் ஒரு வழிபாடு அற்ற அதே நேரத்தில் ஒரு முக்கிய நாளாகவே கருத படுவதுண்டு . ஏனெனில் விவசாய பின்புலத்தார்க்கும் ,வியாபார பின்புலத்தார்க்கும் இந்த விழாவிற்கு பின் ஒரு வாழ்வு மேம்பாடு தெரிகிறது.எனவே எவ்வித காரணமும் இன்றியே கொண்டாடல்களும் உவகைகளும் ஊற்றெடுக்கின்றன .
ஆம் வண்ணக் கோலமிடுதலும்,வாசல் வைத்து பொங்கலிடுதலும் சமூகத்தில் கிடையாதுதான் .பல வீடுகளில் வெள்ளை அடித்தலும் ,புதுச்சட்டம் மாட்டுதலும் (புது ஓடு ) பொங்கலுக்கு முன் நிகழ்வதை பார்த்ததுண்டு .
சமிபத்தில் ஊர் சென்ற போது பல மாற்றங்கள் காண நேர்ந்தது . பொங்கல் பண்டிகை என்பது விவசாயம் தொலைத்த ஊரில் எப்படி தொலைந்து போகும் என்பது காண நேர்ந்தது . விலையில்லா அரிசி கூட விளம்பல்களை தடுத்திருக்கலாம் . இளைஞர்கள் கபடி போட்டிகளில் பொங்கல் கொண்டாடுகின்றனர் . கோவில் வளாகத்தில் நிகழும் கபடி போட்டியில் ஒரே அணியில் விளையாடும் என் நண்பர்களில் இந்து யார் இஸ்லாமியர் யார் என்று இனம்காணும் கொடுமனம் இறைவனால் எனக்கு கொடுக்க படவில்லை .
பொங்கல் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து விலகி கொண்டிருப்பது உணர முடிந்தது அதற்க்கு காரணம் விவசாயம் விலகி போனதுதான் என்பதை யாருக்கு விளக்குவது . வளைகுடாவில் வாழ்வை எரிபொருளாக்கி கொண்டிருக்கும் என் தலைமகனுக்கு எல்லா திருவிழாவும் தொலைந்த பொருள்தான் ..
விவசாயத்தை என்ன இந்த சமூகம் மட்டுமா தொலைத்து உள்ளது ?பரவலாக அனைத்து தமிழ் சமூகமும் விவசாயமும் விவசாயியும் சாய்ந்து விழுவதை கண்மூடி கடந்து கொண்டு அடுப்படியிலும் தொலைக்காட்சி பெட்டியிலும் இன்னும் பரந்த மனதுடன் வெள்ளித்திரையிலும் பொங்கல் திருவிழாவின் விலாஒடித்து கொண்டிருக்கின்றன .
இஸ்லாமியர்கள் வாழ்வின் அறநூல் என பின்பற்றும் ஹதீஸ் எனும் நபி வழி தொகுப்பு நூலை பார்க்கையில் சில நபி மொழிகளை நினைவுற செய்கிறது
நூல் புகாரி பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2320
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல் புகாரி பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2321
முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார்.
அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள்.
மேலே உள்ள நபி மொழி எந்த சமூகம் விவசாயத்தை புறக்கணிக்கிறதோ அந்த சமூகம் இறைவனால் இழிவை சந்திக்க கூடும் என்று போதிக்கிறது.
இதோ இறைவன் விவசாயியை மறுமையில் எப்படி அணுகுகிறான் என்பதை கீழ்காணும் நபிமொழி மூலம் பாருங்கள்
புகாரி பாகம் 3, அத்தியாயம் 41, எண் 2348
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:
சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், 'நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்" என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், 'எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது" என்று கூறுவான்.
இந்த விவசாயத்துடன் தான் பொங்கலும் நம்மை விட்டு விலகி கொண்டிருக்கிறது .
சரி பொங்கலிடுதல் என்ற வழமை ,நம் பண்பாடு இஸ்லாமிய சமூகத்தில் எப்படி உள்ளது என்பதை அடுத்து தொடர்கிறேன் ...