மெளனமாய் ஒரு பூகம்பம்- 3 - சந்தோஷ்

கற்பனா...! தேவதை..! காதல் தேவதை...!

காதல் உணரும்போதெல்லாம் வாசுதேவனின் மனதில் பிறந்த கற்பனை தேவதையே இந்த கற்பனா..!

கனவுச்சோலையில் வாசுவின் ஆழ்மனம் புகைப்படம் எடுத்த உருவம் இந்த கற்பனா..!

கற்பனா என்பது இவனாக தன் வருங்கால காதலிக்கு வைத்துக்கொண்ட பெயர்.

கற்பனா எனும் உருவத்தின் நிழற்கள் வரைப்படகோடுகளாய் இவன் மூளை மடிப்புக்களில் பதிந்துகிடந்திருக்கிறது. ஓவியமாய் பருவவயதில் மனதில் பதிந்தவள். சிற்பமாய் இவன் நினைவுகளில் செதுக்கிக்கொண்டவள். பள்ளி, கல்லூரி நாட்களில் கடந்துப்போன பெண்களையெல்லாம் கற்பனா உருவத்தின் கோடுகளை ஒப்பிட்டு சரிப்பார்த்து “ ஜொல்” விட்டிருக்கிறான் இந்த ரசனைக்கார மன்மதன். ஆனாலும் வெகுதொலைவில் தங்கமின்னலாய் மின்னும் எந்த பொண்ணும் நெருங்கி விடும்போது மங்கலாய் காதல் மங்களம் இல்லாமல் இவன் ரசனையின் அகராதியில் அர்த்தமற்று போனார்கள்.

பல சிகப்பு மேனிக்காரிகள், சில ஜிலுஜிலு கொழு கொழு சதைக்காரிகள் என பலரும் இவன் வெள்ளை உள்ளத்திற்காக நெருங்கி வந்தனர்.

தோழிகளே..! என ஆரத்தழுவிக்கொள்வான் அன்றி யாரையும் காதலியாக எண்ணி ஏற்றுகொண்டதில்லை. ஹார்மோன்களின் தூண்டலில் காதலியை தேடிக்கொண்டுதான் இருந்தான் வாசுதேவன். நாட்கள் செல்ல செல்ல வேலை, மன அழுத்தம், அது இது என்று கற்பனா இவன் நினைவிலிருந்து மறைந்துபோய்விட்டாள். ஆனால் நிலைத்து நின்றாள் வாசுவின் ஆழ்மனதில்..!

ஹார்மோன்களின் சதியில் நல்லவேளையாக இதுவரை வாசுதேவன் காதல் போன்ற எந்த மாயைஆழியில் விழுவே இல்லை. இதுவரையிலும். இப்போது இந்த நூலகத்தில் இவன் எதிரிலிருக்கும் இந்த கருப்பு தேக விழிக்காரியை காணும் வரையிலும் விழவே இல்லை. ஆம் ! பதினாறு வயதில் கனவில் கண்ட கற்பனா எனும் உருவக்கோடுகள் கட்டுப்பாட்டு கோடுகளாக இவனை எச்சரித்தே வளர்த்துவந்திருக்கிறது. வளர்த்திருக்கலாம் இவனையும் அறியாமல்..!


வாசுதேவனின் கற்பனா- வாக எதிர் இருக்கையில் கவிப்பேரரசுவின் கருவாச்சி காவியம் படித்துக்கொண்டிருக்கும் வாசுதேவனின் கருவாச்சி.. இப்போது மேஜையில் வலது கையின் முட்டியை ஊன்றி விரல்களை அவள் முகத்திற்கு முட்டுக்கொடுத்தவாறு சுவராஸ்சியமாக படித்துக்கொண்டிருக்கும் காட்சியை உற்றுப் பார்த்த... வாசுதேவனுக்கு மீண்டும் திடுக்கிட்டது மனது .

இவள் வாசுதேவனின் கற்பனா தான்.. ஆம் அதே அதே உருவம். அதே கண்கள். கழுத்தில் ஒரு மச்சம். கருப்பு நிறம். மீன் விழிகள். வட்ட முகம். சின்னதாய் அழகாய் மூக்கு. இதோ இதோ கற்பனாவின் வலது கையில் ஆறாம் விரல். ஆம் ஆறாம் விரல்..

இவளே தான் இவளே தான் இவனின் கற்பனா...!

எங்கே இவளை ரசித்தான்.. காதலித்தான்.......... புரியாமல் தெளிவில்லாமல் தெளிவடைந்தான் வாசுதேவன். கற்பனா தான் இவன் காதலி என்று தெளிவடைந்தான்.
----------------------
எங்கோ எப்போதோ நிகழ்ந்த காட்சி போல இங்கே இப்போது நிகழ்கால திரையில் காணும்போது. மனித மனம் எதையோ தேடி கண்டறிந்ததுப்போல ஒர் அதிர்ச்சியுடன் திருப்தியை தரும். திருப்தி தந்தாலும் விடைத்தேட துடியாய் துடிக்கும். மனித வாழ்வில் சில நிகழ்வுகள்... சிலரை சந்திக்கும் நிகழ்வுகள் புதுப்புது சந்தோஷபூரிப்பை உண்டாக்கி புத்தம்புது உணர்வுகளை தரும். இப்படிப்பட்ட் நிகழ்வுகள் ஆழ்மனதில் என்றோ மனிதனால் தெரிந்தோ தெரியமாலோ பதிவுசெய்யப்பட்டவையே..
இதற்கு உளவியல வியாக்கினங்கள் காரணங்கள் பல உண்டு. மனித மூளையில் நிகழ்த்தப்படும் மனப்பதிவுகள். பதிவுகள் காட்சிப்படும் நிகழ்வுகள் எந்த அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் கட்டுப்படாது.
இப்படி கட்டுப்படாதவைகளை பேரா சைக்காலஜி என்று ஒதுங்கிக்கொள்ளும் இந்த அறிவியல மேதாவி உலகம்..!

மனிதனின் மரணத்திற்கு பிந்தைய நிகழ்வுகளை கண்டறியா இந்த அறிவியல் மேதாவி உலகம் இதுப்போன்ற ஒரு பிரம்மையை.. ஆழ்மனதில் பதிந்த காதல் உணர்விற்கு, வாசுதேவனின் விசித்திர உணர்விற்கு நிச்சயம் பதில் வைத்திருக்காது.
----------------


வாசு கற்பனாவிடம் பேசவேண்டுமே. மூன்றாம் உலகப்போரில் சந்தேகத்தை தேடினான். வைரமுத்துவிடம் கேட்க வேண்டிய கேள்வியை கற்பனாவிடம் முன்வைக்க தேடினான் பக்கம் பக்கமாக...! உலகப்போரை நிகழ்த்தியது வைரமுத்து ஆயிற்றே...! புஸ்தகத்தின் இந்த பக்கத்தில் கேள்வி வைத்து அந்த பக்கத்தில் பதிலை ஒளித்து வைத்து விளையாடுவதில் கில்லாடி கவிஞரய்யா இந்த கருப்பழகன் வைரமுத்து.

சரி கற்பனாவின் நடுநெற்றியை சற்றுநொடி உற்று நோக்கினால் ஒற்றை நொடியாவது அவளின் விழி முழியை உருட்டி தூக்கி வாசுவை பார்க்கதானே வேண்டும்.

நோக்கினான்... அவள் நெற்றியை... அவள் நடுநெற்றியில் இருக்கும் பிட்யூட்டிரி சுரப்பி .. கற்பனாவை ஏதோ கிளர்ச்சியடைய செய்தது.

தன்னை யாரோ மென்மையாக முகத்தில் வருடுவதைபோல கிளுகிளுப்பான உணர்வை கண்டாள்..!

மேஜையில் ஊன்றிய கற்பனாவின் வலதுகை அசைய ஆரம்பித்தது. அசைந்துவிட்டது. கைகளை மேஜைக்கு இறக்கினாள். விழிகளை புத்தகத்திலிருந்து மேல் எழுப்பினாள்.

வாசுதேவனுக்கு இதயம் இம்முறை நிமிடத்திற்கு 143 முறை துடிக்க ஆரம்பித்தது.

கற்பனா வாசுவை பார்ப்பாளா? வாசுவை கண்டு இவளுக்கும் மலருமா காதல் ?

[ தொ~ட~ரு~ம்]

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (12-Nov-14, 1:35 pm)
பார்வை : 208

மேலே