கருப்பொருள் தவறல்லவே

​ஆனந்த ஊஞ்சலாடும்
அழகுமிகு ஓவியமே !
அணைக்கும் பூங்காற்றை
அனுபவிக்கும் தென்றலே !

களிப்பின் விளிம்பினிலே
களியாட்டம் உன்நிலையா !
களம்வென்று கடல்நீந்தி
கரைகண்ட இன்பநிலையா !

களைப்பும் மறைந்ததாலே
கலைந்திட்ட உன்கேசமா !
கலகலப்பின் உச்சத்தாலே
கரைகின்றது உன்சுவாசமா !

கருமேகமாய் உன்கூந்தலும்
கடும்புயலின் உருவகமோ !
களையிழந்தது சுற்றுப்புறமும்
களைநிறைந்த உன்முகத்தாலே !

தீட்டியது ஒருஓவியமா
திகட்டாத காவியமாய் !
தீண்டாத நெஞ்சினையும்
தீண்டிடும் வஞ்சியவள் !

அழகுக்கு அழகூட்டுது
அணிந்திட்ட ஆடையுமே !
அழகுக்கும் மெருகூட்டுது
அளவான அணிகலனால் !

ஆட்டுவிக்கும் ஆடவரை
ஆடுகின்ற அழகுந்தானே !
ஆடவைக்கும் பெண்டிரை
ஆட்டுவிக்க ஆண்களை !

கற்பனையில் பிறந்ததா
கதையல்ல நிஜங்களா !
கணநேரம் யோசித்தேன்
கண்சிமிட்ட வாசித்தேன் !

கவிதைகுவியும் நம்தளம்
காதல்நிறை களமானது !
காதல்வரிகள் வடிப்பதோ
காததூரம் ஆனதெனக்கு !

கருத்திடும் உள்ளங்களை
கருத்தோடு கேட்கின்றேன் !
கருப்பொருள் தவறல்லவே
கருத்தாய் கருத்திடுங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Nov-14, 9:28 am)
பார்வை : 193

மேலே