நகர விளக்குக்கள்

நீங்க ஒவ்வொரு தடவையும் வீட்டுக்கு தாமதமாக வரும் போது சாலையின் இருபக்கங்களும் இருக்கும் விளக்குகளை கூர்ந்து கவனித்து இருக்குறீர்களா, இல்லை சிக்னலில் நிற்கும் போது அருகில் இருக்கும் பேருந்தில் உள்ளே பரவி நிற்கும் வெளிச்சத்தில் சிறு குழந்தையை பார்த்து இருக்குறீர்களா? இல்லை மழைக்கால இரவில் சாலைகள் தத்தெடுத்துக்கொண்ட சிறு சிறு ஒளிக்கீற்றை பார்த்து பரவசம் அடைந்து உள்ளீர்களா? இல்லையென்றால் அதே மழை தன் சேவையை மறந்து வெளிச்சத்தில் காதல் கொண்டு தோல்வி அடைந்து கண்ணாடி வழியே கண்ணீர்விட்டு வழிவதை ரசித்து நின்றிருக்குறீர்களா? உங்கள் பதில் இல்லை என்றால் இனிமேல் இவைகளை காண கற்றுக்கொள்ளுங்கள் .........

மனித மன ஓட்டத்தின் பிரதி பிம்பமாய் பிரகாசிக்கின்றன ஒவ்வொரு மின்விளக்கும் ......

நகரத்தில் வாழும் எங்களை போன்றோருக்கு ஆற்றங்கரை கோவிலும் ,ஆலமரத்தடி நிழலும் , சாமரம் வீசும் தென்றலும் எட்டாக்கனிதான் ! இங்கு இருப்போர் எல்லோரும் வெகு விரைவில் தனிமை வாசிகள் அல்லது தனிமை விரும்பிகள் ஆகிவிடுகிறோம்! தங்களுக்கு விரும்பிய ஒன்றில் ஈடுபாடு ஆகும் வரை நிலையில் இருப்பதில்லை இந்த மனம்.... நான் லயிக்க ஆரம்பித்தது கண்களை ஆர்பரிக்கும் வெளிச்சம் தரும் தரும் நகரத்து விளக்குகள் மீது ! இந்த விளக்குகள் சொல்லும் எண்ணங்கள் தான் என்னவாக இருக்கும்.... வித வித தோரணையுடன் இருட்டில் இருக்கும் அத்தனையையும் வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றன இந்த நகர விளக்குகள் ....

சாலையோரம் நின்று சில நூறு மக்களுக்கு உணவு படைக்கும் கையேந்திபவனின் கைதேர்ந்த சமையல்காரனின் உழைப்பு , கண்ணாடிக்குள் இருக்கும் பொம்மையை, விலையுர்ந்த ஆடையை , தொங்கவிடபட்டிருக்கும் காலணிகளை கேட்டு நைக்கும் பெண்கள் (பிராயத்தில் வேறுபடலாம் ஆனால் நச்சல்கள் குறைவதே இல்லை)... சுதந்திர விரும்பிகளின் கால்நடை பயணங்கள், வேலை முடித்து வீடு செல்லும் அவசரகாலத்தில் பிரசிவித்த நகர மனிதர்கள், காரிலும் பைக்கிலும் சிட்டாய் பறக்கும் நவீன காலத்து இரவு பறவைகள் , தங்களின் அன்புக்கு உரியவரை கை பிடித்து பாதுகாப்பாய் அக்கறையாய் அழைத்து செல்லும் நம்பிக்கைக்கு பாத்தியப்பட்ட உறவுகள், விளம்பரம் விரும்பும் உயர்தர கடைகள் , தேவைகளை உணர்த்தும் எரிபொருள் நிலையங்கள், மருந்தககங்கள் , இடை இடையே பிரிந்து செல்லும் கிளைநதி சாலைகள், எங்கோ ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் பிரமாண்ட கல்யாணம் என எல்லாம் சிறப்பாய் இயக்கபடுகிறது இந்த விளக்குகளின் வெளிச்சத்தின் கீழ்...

ஒவ்வொரு நிறத்தையும் கடந்துவரும் போது எதோ ஆயிரம் மாற்றங்கள் உள்ளோடுகிறது! வர்ணங்கள் , வெளிச்சங்கள் , அலங்காரங்கள் ம்ம்ம்ம் இன்னும் எத்தனையோ சொல்லலாம்..... ஒருவேளை இதை படித்து முடித்துவிட்டு நீங்கள் உங்கள் வீட்ற்கு காரிலோ , பஸ்ஸிலோ இல்லை ரயிலிலோ செல்வீர்கள் ஆனால் உங்கள் நேரத்தை செல்போனிலும் , அரட்டையிலும் வீண் செய்யாமல் நகரத்து விளக்குகளை கவனியுங்கள்....

யாருக்குத் தெரியும் உங்களின் சந்தோஷத்தை வெளியே கொண்டுவரும் சக்தி அந்த வெளிச்சத்திற்கு இருந்தாலும் இருக்குமென்று........

*******************************************************************************************************************************************************

Coimbatore city lights are pretty awesome.... Yesterday i enjoyed it so much........

எழுதியவர் : நித்யா (14-Nov-14, 7:29 pm)
பார்வை : 228

மேலே