தாய் மொழி வழி கல்வி - தமிழன் பரிதி வருங்கால உழவன்

எத்தனித்து எத்தனித்து உன்வழியே வெளிவந்தேன்,
எல்லையில்லாப் பெருவுலகைக் கண்டறியத் தான்வந்தேன்.
பட்டறிவு தவிர்த்திங்கு படிப்பறிவை நான்ஏற்க...
பள்ளிக்குள்
சென்று விட்டேன்,
பாடத்தை ஏற்க நின்றேன்.
செவிப்பறை வரை வேறுமொழி,
அதற்கு மேல்
அன்னைமொழி.
அன்னைஉன்
கருவரைதான்
ஆலயமே என்றுரைத்த...
தமிழ்
மொழியை தவிர்த்திங்கு,
எதைவைத்து நீ ஏற்றாய்...
பதம் பெற்ற சடலமென
எனைஈன்ற உனையுரைத்த
அந்த மொழி ஆங்கிலத்தை?
என்மொழியில்
இல்லா அறிவை
எவ்வழியில்
அதில் கண்டாய்?
இதிலெதுவும்
இல்லையென்று எதைக்கண்டு எடுத்தெறிந்தாய்?
எல்லாவும்
கொண்டு இங்கு எந்தைமொழி இருக்கும்போது,
எங்கிருந்தோ வந்து உன்னை...
அடிமையாக்கி வைத்திருந்த
அந்த மொழி ஏற்றதேனோ?
எந்தன் மேல்
திணித்ததேனோ?
எல்லையில்லா அறிவியலை எடுத்துரைத்த
தமிழ் தவிர்த்து,
கடன்பெற்று மொழிவளர்த்த
ஆங்கிலமா சிறப்புனக்கு?
வயிற்றுக்காக
குரலுயர்த்தும்
யாசகனைப்போல்
ஆனேன்,
சோற்றுக்காக அவன்மொழியில் 'SIR'
என்றழைத்த போது.
குலம் சிறக்க வந்தவளாய்
என்னை நீ
நினைத்திருக்க,
அமுதத்தமிழ் அழிக்கவந்த
நஞ்சு என பழிசுமந்து...
கோடாரிக்காம்பென்ற
பட்டத்
தோடலைகின்றேன்,
சுயம் தொலைத்த
கழுதையைப்போல் உன்
பொதியை சுமக்கின்றேன்.
தந்தை சொல் மெய்யென்ற
கருத்தில் நான்
இருந்துவிட்டேன்,
ஆங்கிலமே அறிவென்ற
சொல்லை நான்
ஏற்றுவிட்டேன்.
தெளிந்த பின்னே நான்
உணர்ந்தேன்,
அறிவிருக்கும்
எவரேனும்
பிச்சை தொழில்
புரிவாரோ?
இங்கிலாந்தில்
பிச்சைத் தொழில்
இல்லாமல் இல்லையப்பா.
தாய்தமிழில்
படித்துவிட்டு நீதியரசர்
ஆகின்றார்,
ஆங்கிலத்தில்
படித்து நானும்
வெற்றுக்கூலி ஆவதுவோ?
எந்த மொழி படித்து-
பாட்டன்
கல்லணையை கட்டினான்?
உருசியாவின் நுட்பம்
கொண்டா-பாட்டன்
பெரியகோவில்
கட்டினான்?
எல்லாவும் போகட்டும்...
காலநடையில் mummy-
யை கூட mom
ஆக்கினோம்,
அமுதத்தமிழோ என்
தாயை காத்துநின்றது.
அமுதத்தமிழை நீங்கள்
மட்டும்
அள்ளிக்குடித்தீர்கள்,
எங்கள் மொழியமுதில் ஏன்
நஞசை விதைத்தீர்கள்?
நான் எந்தன் அறிவால் உலகாள...
நாளும் அறிவியல் தமிழ்
கொடுங்கள்!

எழுதியவர் : க.தினேசு (1223108), மூன்றாம் ஆண் (14-Nov-14, 10:07 pm)
பார்வை : 188

மேலே