எனது கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறேன் 10

தேன் கிண்ணம் 1

உதடுகள்
மொழி பேசும்
இசைபாடும்
புன்னகையின்
புத்தகமாய்
விரியும்
ஞானியை போல்
மௌனத்தில்
தவமும்
புரியும்

உறவாடும்
உள்ளங்களுக்கு
இரவில்
தேன் கிண்ணமும்
ஆகும்
=====================================================================

வீதியில் ஓர் ஓவியம் 2

இன்னும் முழுதும்
முடிக்கவில்லை
எங்கிருந்தோ வந்தது
மழை
மக்கள் கலைந்தோடினர்
சித்திரம் கரைந்தோடியது

சில்லறை சன்மானம்
சித்றிக் கிடந்தது
அவன் எதையும்
தொடவில்லை

முடிக்கும் முன்னே
கரைந்த சோகம்
நெஞ்சில் கனத்தது

கலை நெஞ்சில்
ஓவியம் வரைகிறது
பசி வயிற்றில்
ஓவியம் வரைகிறது

நாளை இன்னொரு வீதி
வெய்யிலோ மழையோ
யார் அறிவார்

=====================================================================

அரங்கேறாத கனவு 3

நினைவுகளில் ஒத்திகை
பார்த்தேன்
அவளுடன் கைகோர்த்து
நடப்பதாக
கனவுகளில் ஒத்திகை
பார்த்தேன்
அவளுடன் வெள்ளை ஆடை உடுத்தி
வானில் பறப்பதாக
நிஜங்களில்
ஒத்திகையும் இல்லை
ஒப்பனையும் இல்லை
கனவும் நினைவும்
அரங்கேறவே இல்லை
ஏன்?
=====================================================================

உதயம் எனும் கவி அரங்கம் 4

நீல வான மேடையில்
இயற்கை தேவியின்
காலைப்பொழுது எனும்
கவிதை அரங்கேறுகிறது

தேன் சிந்தும் மலர்கள்
தென்றலுடன் வாழ்த்துப்
பாடுகிறது

ஆரஞ்சு வண்ணப் பொன்னாடை
போர்த்தி காலை கதிரவன்
தலைமை உரை நிகழ்த்த
எழுகிறான்

மனிதர்களெல்லாம்
கரவொலி செய்தல்ல
கரம் கூப்பி வரவேற்று
நிற்கிறார்

உதயம் எனும்
கவி அரங்கம்
ஒவ்வொரு நாளும்

=====================================================================

அழைப்பிதழ் 5

திருமண
அழைப்பிதழில்
எனக்காக
தனியாக
இரண்டு வரி
எழுதியிருந்தாள்

மன்னித்து விடு
மறந்து வந்து விடாதே
=====================================================================

மானுடம் எனும் மலர் விரிப்பு 6

பார்க்கும் விழிகள் உண்டு
பார்க்க ஒளியில்லை
உதவும் கரமாக
வெள்ளை தடி உண்டு
ஒவ்வொரு மூலையிலும்
மனித மனம் உண்டு

நாங்கள் நடக்கும் பாதையில்
வெளிச்சம் இல்லை
ஆனால்
மானுடம் எனும்
மலர் விரிப்பு உண்டு
====================================================================

கனவுகள் கலைவதேன் மலர்வதேன் 7

இரவின் கனவு
காலையில் கலைந்து விடுகிறது
காலையின் அனுபவங்கள்
இரவில் கனவுகளாக மலர்கிறது

கனவுகள் கலைவதேன்
மீண்டும் மலர்வதென்

நிஜங்களில் நிற்கமுடிய்யத கனவுகள்
கனவுத்திரையின் பொய் கட்சிகள்

ஆயினும்
மனிதன் கனவு காண்கிறான்
கனவு தரும் சுகத்திற்காக இல்லை
ஒருநாள் நனவாகும்
என்ற நம்பிக்கையில்
=====================================================================

காளானின் வேண்டுகோள் 8

உங்கள் வயிற்றுக்கு
உணவாகி
மனித சேவை
செய்கிறோம்

இனியாவது
கயமையுடனும்
தீமையுடனும்
காளான்களை
ஒப்பிட வேண்டாம்
உங்களுக்கு
புண்ணியமாக போகும்
=====================================================================

ஏழ்மை எனும் ஏழாவது சுரம் 9

சுதந்திர கீதத்தில்
ஒரு சுரம் மட்டும்
இன்னும்
இசையுடன் சேராது
விலகியே நிற்கிறது

அது
ஏழ்மை என்னும் ஏழாவது சுரம்
அதை
சுருதி சேர்த்து இசை பாட
ஓர் இசை கலைஞன்
இந்த நாட்டில் இன்னும்
உருவாகவில்லை
=====================================================================
கனவுகள் கலைவதில்லை 10

நிலவோடு
உனக்கு உறவு
உன் நெஞ்சோடு
எனக்கு உறவு
நம் இருவரின்
உறவு
கனவோடு

இரவோடு வரும்
கனவுகள்
கலைவதுண்டு

நம் நினைவோடு வரும்
கனவுகள்
ஒருநாளும்
கலைவதில்லை
====================================================================
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Nov-14, 10:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே