எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 11
புதிய சமூகச் சேவை 1
முடிந்தபின்
காசு இல்லை
என்றான்
வேசி சிரித்தாள்
வேசியிடமும்
ஓசியா ?
விலையின்றி
விலை அட்டை இன்றி
சந்தைக்கு வராத
பொருளே இல்லை
அரசியலிருந்து
ஆன்மீகம் வரை
எல்லாம் அங்காடிப் பொருள்
இது சமூக தீமை
இன்று சமூக சேவை
போ என்றாள்
சேவை தொடரட்டும்
என்றான்
அவள் இன்னும்
உரக்கச சிரித்தாள்
========================================================================
ஒர விழியில் 2
ஓர விழியில்
காதல் எழுதி
இன்று
வேறு வழி
மாறிவிட்டாய்
ஏன் ?
ஈர விழியில்
நான்
கவிதை எழுதுகிறேன்
========================================================================
ஒரு வெள்ளைக் கடிதம் 3
மாலையில் வந்த கடிதத்தை
ஆவலாய்ப் பிரித்தேன்
உள்ளே ஒன்றும் எழுதவில்லை
வெள்ளை
முகவரி அவளுடையதுதான்
அவள் உள்ளத்தை
அடையாளம் காட்டுகிறாளா
நானே எழுதிக்கொள்ளவேண்டுமா
இல்லை
மௌனமான காதலுக்கு
வார்த்தைகள் எதற்கு என்று கேட்கிறாளா
குழம்பினேன்
சிம்பாலிக் லெட்டர்
புரியவில்லை
மறுநாள்
அவளிடமே கேட்டேன்
முகவரி எழுதிவிட்டு
கடிதம் எழுத
மறந்து விட்டேன்
என்றாள்
சர்வ சாதாரணமாக
========================================================================
மலர்களைப் போல் சிரிப்போம் 4
மலர் மாலையில்
சிரிக்கும் பூக்கள்
மலர் வளையத்தில்
அழுவதில்லை
மலர்களுக்கு
சோகங்கள் இல்லை
பூவுக்கு
தெரிந்ததெல்லாம்
சிரிப்பு ஒன்றுதான்
சிரித்து மலர்ந்து
உதிர்ந்தும் சிரித்து
சிரித்தே வாழும்
இறைவனின்
படைப்பு
பூ ஒன்றுதான்
பூ போல சிரிப்போம்
புன்னகையுடன்
வாழ்வோம்
========================================================================
கொடைக்கானல் 5
உன் மூச்சு
எனக்கு
தென்றல் காற்று
உன் பேச்சு
என் அமுத ஊற்று
உன் விழியன் நிழல்
என் கொடைக்கானல்
========================================================================
சாவின் வாசல் 6
போதை தந்த சுகத்தினால்
பாதை இழந்தான்
புகை தந்த சுகத்தினால்
புற்றை வளர்த்தான்
காமம் தந்த சுகத்தினால்
நோயை வாங்கினான்
நோவு வந்து துடிக்கும் போது
சாவின் வாசல் தேடினான்
========================================================================
பொதிகைத் தென்றல் சிந்திய புன்னகை 7
பொதிகைத் தென்றல் சிந்தியது
ஒரு புன்னகை
புன்னகையில் விளைந்தது
ஒரு கவிதை
கவிதை வந்தது
தென் மதுரை
மதுரை கண்டது
ஒரு பேரழகை
அந்தப் பேரழகின்
பெயர் அங்கயற்கண்ணி
அங்கயற்கண்ணி
அடி பணிந்தால்
கொஞ்சிடும்
உன் கவிதை
========================================================================
மத்தியதர வர்க்கப் போராட்டம் 8
பங்களாவும் பகட்டும்
கிடைக்கவில்லையே
என்ற அன்றாட ஏக்கம்
விலைவாசிக் கொடுமையில்
எளிமையாய் வாழ்வும் தயக்கம்
வங்கியில் வாங்கிய லோனால்
வாசல் எல்லாம் அவமானம்
மேலும் இல்லை கீழும் இல்லை
என்று திரிசங்கு ஆகி
கனவுகளுக்கு கைகொட்டி
தினம் நாலு சினிமா பார்க்கும்
வினோத உலகம்
கனவுத் தேவதை ஒருத்தி
விரிந்த இறக்கையுடன் வந்து
கை நிறையத் தருவாளா ?
========================================================================
தாகூர் ஒரு கவிப் பிரவாகம் 9
கவிஞனின் ஜன கண மன
தேசீய கீதம்
கவிஞனின் கீதாஞ்சலி
கவிதை அமுதம்
கீதாஞ்சலி பெற்ற நோபலில்
இலக்கியத்தில் உயர்ந்தது பாரதம்
கவிஞனின் ரவீந்திர சங்கீதம்
இசையில் ஒரு அற்புதம்
குருதேவன் ரவீந்திரநாதன்
ஒரு கவிப் பிரவாகம்
========================================================================
தோற்ற மாயம் 10
வான் முகட்டை
முட்டி நின்று
விஸ்வ ரூபன் ஆனான்
விட்டெறிந்த வில்லை
தொட்டுப் போர் தொடு
என்று
சங்கை முழக்கினான்
வடிவத்தை
குறைத்து நின்று
வாமனன் ஆனான்
தரமுடியாத
அடிக்காக
அரச அரக்கன்
தலையில்
காலடி வைத்தான்
சிறிதும் பெரிதும்
அவன் செய்த
தோற்ற மாயம்
சூட்சமம்
அவன் தந்த
கீதையின்
பாடம்
======================================================================
-------கவின் சாரலன்