இம்மகளின் தந்தை
அழகூரில் கட்டப்பட்டு,
தங்கத்தில் மெழுகிட்டு ,
ஆபரணத் தோரணங்கள்,
அக்ஷயமாய் தொங்கவிட்டு,
அந்த மாளிகையில் மாராணி ஆகிறேன்
பிறந்த நாழிகை முதல்,
தேசம் - தந்தையுன் உள்ளம்...
வாழ்வென்ற குளத்தில் - உன்
அன்பெனும் ஆயிரம் தாமரை மொட்டுக்கள்,
வேரின் வளமையும் மலரின் செழுமையும்
உணர்த்தும் இக்குளத்தின் யௌவனத்தை...
உன் கழுத்தை இறுக்கப் பற்றும்போதும்,
உன்தோள்களில் ஏறி ஓடும் போதும்,
உன் முகத்தினில் அடித்து ஆடும்போதும்,
எனக்கான உயிருள்ள பொம்மையாகிறாய்..
என் பாதையில் இடப்பட்ட,
கற்களும் முட்களும்
இன்னபிற தடைகளும்,
தூர்வாரப் படுகின்றன
உன் அதட்டலில் உள்ள அன்பிலும்
உன் அன்பில் உள்ள அதட்டலிலும்...
நான் பற்றிக்கொள்ள,
உன் கரங்களை விட
பாதுகாப்பான கேடயங்களும்
இவ்வுலகினில் உள்ளனவோ?
இந்தக் கோபம்,
இந்த அரவணைப்பு,
இந்த அன்பு,
இந்த அக்கறையை
வெறும் பாதிப் பிறவிக்கு மட்டும் அளித்ததால்,
அந்தக் கடவுளையும் சாடுகிறேன்...
இங்கு காண்பவற்றில் உள்ள ஈர்ப்பு,
அறிவால் வந்த ஈர்ப்பு...
உன்னிடம் வந்த ஈர்ப்பு, பிறப்பிலேயே
அனிச்சையாய் வந்த ஈர்ப்பு...
மனிதனைப் படைத்தவன் இறைவனென்றால்
என் இறைவன் நீதானே...