நாளைய சமுதாயம்
அடுத்த தலைமுறையே!
அலங்கார பெட்டகமே!
ஏடெடுத்து படிச்சிகோங்க,
எல்லாம் தெரிஞ்சிகோங்க,
நாடாளும் தலைவர்களா
நாளைக்கு வாரயில,
ஏழைய நினைச்சிகோங்க
எப்போதும் சேவையிலே
வல்லரசு ஆகவேண்டாம்
நல்லரசு ஆட்சிபோதும்.
பணக்கார தேசம்வேண்டாம்
பசியில்லா மக்கள்போதும்.
கள்வர்கள் பயமின்றி
கண்ணுறங்கும் காலம்வேண்டும்.
கொள்வார்கள் எல்லோரும்
கொடுப்பதற்கு வரவேண்டும்
கொடுப்பதற்கு மனம்வந்து
கொடுப்பார்கள் நின்றாலும்
பெறுவதற்கு யாருமில்லா
பெருமைகொள்ளும் நிலைவேண்டும்.
காதலுக்கு சின்னம்வைத்து
கட்டிலிலே பதித்தபின்பு
மோதலென்று சொல்லி
முடித்துவிட நினைக்காமல்
கடைசிநாள் வரைக்கும்
கைகோர்த்து வாழவேண்டும்.
வளமாக வாழ்வதற்கு
வீட்டுகொரு பிள்ளைபோதும்,
வான்மழை பெறுவதற்கு
வாசலிலோர் மரம்வேண்டும்
நீர்தான் வழிநடத்தும்
நாளைய சமுதாயத்தை
அனைவரும் சமமென்ற
அழகான சமுதாயமாய்,
குப்பையும் குடிசையும்
இல்லாத சமுதாயமாய்
இருந்திட வேண்டுமே
நாளைய சமுதாயம்!