===+++வாழ்க்கையோ வாழ்க்கை+++===

ஐயோ ஐயோ கொடுமையடா கொடுமையடா
அன்னை பூமி அழியுதடா அழியுதடா
ஏத்தம்கட்டி நீரிறைத்து யானைகட்டிபோரடித்து
வயலும் வாழ்வும் சிறந்ததொரு காலம் - அந்த
காலமின்று மறைந்ததந்தோ மாயம்...

வயலும் வாழ்வும் வளமைபெற்ற நாடு
வருமையாலே வதகி கிடக்குப் பாரு
நகரம் பார்க்க அழகழகாய் இருக்கும் - அதை
நன்றாய்ப்பாரு நகைப்புவரும் உனக்கும்...

நகரம்தேடி போவோர் கூட்டம் அதிகம்
நாளும் நாளும் நமதுவாழ்வு சிதறும்
பணத்துக்காக நிலத்தை விற்கும் மனங்கள் - இந்த
மண்ணில்வாழத் தகுதியற்றப் பிணங்கள்...

பணத்துக்காக கொலையைச் செய்யும் கூலி
மனித இனத்திலேயே இவன் முதல்பாவி
பொய்யறிந்து உயிரைவிட்டான் செழியன் - அந்த
தமிழ்மரபு ஆகிபோச்சி சுழியம்...

பொய்யுரைத்து புளுகில் தினம் வாழ்ந்து
பூமிப்பந்தில் என்றும் தரம் தாழ்ந்து
வாழ்க்கை எச்சம் ஆகிப்போன மனிதா - உனை
மனிதனென்று விளிப்பதுவே தவறா...?

வாழ்க்கைத்தேடி தூர தேசம் போனால்
சோறுபோட்ட பூமி என்ன ஆகும்
உழவுயின்றி வாழ்ந்திடவா கூடும் - மூடா
காசுத் தின்றால் கடும்பசியாத் தீரும் ?...

உழவன் உள்ளம் வறுமையிலே குமுற
நீங்கள் மூன்றுவேளை தின்றுகொழுத்து மகிழ
உழவந்தானே உனக்குமெனக்கும் தெய்வம் - அவன்
இல்லையென்றால் ஊருலகம் ஒழியும்...

உழவு செய்த நிலங்களையே மறந்து
வாழ்ந்தமண்ணே வேண்டாமென்று துறந்து - நாம்
எங்கே போறோம் என்று யாரும் கேட்டால்
மனசு குறுகுறுத்துப் போகும் நாணக்கேட்டால்...

கழுதையும் களம் சுமந்ததிந்த பூமி - மனிதன்
கழுதையாகி காசுக்காக போறான் - இனி
கட்டுகட்டாய் பணம் கிடைத்தால்கூட - அதை
காகிதம்போல் தின்றும்கூட வாழ்வான்...!


---------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (16-Nov-14, 11:07 am)
பார்வை : 113

மேலே