பள்ளித் தோழி

பள்ளி வந்த தோழியவள் விதைத்துவிட்டாள் காதல் விதை,
விதை முளைத்துப் பூத்தும் நான் சொல்லவில்லை காதல் கதை,
சொல்லுமெண்ணம் வந்தபோது கன்னியவள் காணவில்லை,
தேவதையைக் கண்டபோது சொல்ல மனம் ஒப்பவில்லை,
நாட்கள் பல கழிந்து விட, தேர்வுகளும் முடிந்து விட,
சொந்த வீடு திரும்பி வர, பெற்றோரின் அழைப்பு வர,
தங்கியிருந்த மாமன் வீட்டில் சொல்லிக் கொண்டு நான் கிளம்ப,
எதிர்வீட்டில் குடியிருந்த என்னவளும் விடை வழங்க,
என்னைமீறி வந்தவொன்றை சொல்லிவிட முற்பட்டேன்,
சிரமப்பட்டு அடக்கிவிட்டு கையசைத்துப் புறப்பட்டேன்;
இரயிலெறக் காத்திருந்த இடைவெளியில் நான் குமுற,
உள்ளம்கீறி அவளுக்குக் காட்டிவிட மனம் திமிற,
வந்த இரயில் ஏறாமல், வந்த வழி திரும்பிவிட்டேன்;
விடைகொடுத்த முற்றத்தில், வீற்றிருந்தாள் என் தேவதை;
திரும்பி வரும் எனைக் கண்டு திகைத்து விட்டாள் அத்தாரகை;
மலர்ந்துவிட்ட மகிழ்ச்சியை நொடிப்பொழுதில் மாற்றிக்கொண்டு,
வியப்புடனே வினவினாள் ஏன் செல்லவில்லையென்று;
விட்டுச்சென்ற பொருளொன்றைத் தேடித் திரும்ப வந்து விட்டேன்,
கேட்காமல் எடுத்துக் கொண்டாய், கூறாமல் ஒளித்துக் கொண்டாய்,
நானோ, இதயமில்லா இயந்திரமாய், வாழ்கின்றேன் அதிசயமாய்,
சொல், நீ பறித்த என் இதயம் நலமாவென நான் முடித்தேன்;
அணையுடைத்த வெள்ளம்போல் கண்ணில் நீர் பொங்கிவர,
சற்றுமெதிர்பாராமல் எனையணைத்தாள் அச்சமற,
விழிவழிந்த நீராலே என் நெஞ்சை நனைத்துவிட்டாள்,
பற்றியெரிந்த காடோன்றை கண்ணீரில் அணைத்துவிட்டாள்;
பெண்தானே எவ்விதம்நான் என்காதல் முன்னுரைப்பேன்,
ஆண்மகன் நீ கூறாத பொழுதென்று அவள் வினவ,
திசையறியா வனமொன்றில் விடை தேடி நான் அலைந்தேன்;
வாய் மொழிகள் கூறாமல் பதிலாக நான் அணைத்தேன்.

எழுதியவர் : அ ஜோயல் சாம்ராஜ். (17-Nov-14, 5:19 pm)
பார்வை : 152

மேலே