எது நீ இது நான்-கார்த்திகா

நீ என்னை
நெருங்கும் நேரங்களில்
இதயம் ஓரடி
விலகி நிற்பதை
மனம் விட்டுச் சொல்ல வந்து
சிதற விட்ட
வார்த்தைகளைத் தேடுகிறேன்
உதிர்ந்த பூச்சரங்களின் நடுவிலும்
மறைத்த திரைச் சீலையின் மறைவினிலும் .....

மூன்று முடிச்சிட்டாய்
மூச்சைத் தவிர
அனைத்தும் உன் கரங்களில்..

புது மஞ்சள்
தெறித்த வட்டங்கள்
வெறுமைகளால்
வலியச் சிக்கியபடி...

பிடிக்குமெனச் சொல்லியே
பெயரிட்டழைக்கிறாய்
பிடிவாதங்களை ...

உன் செய்வன செய்யக்கூடாதவை
பட்டியல் ஆயுள்முழுதும்
என்னைச் சுற்றியோ ?

உன்னில் சரிபாதி கேட்கவில்லை
என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள
முழுதும் விற்கப்படவில்லை நான் !

பிடிக்குமென்று சொல்லவில்லை
பிடிக்காதென எதையும்
சொல்லிப் பழக்கமுமில்லை உன்னிடத்தில்..

உணர்வுகள் ஒன்றாத
இடம்தனில் விதைகள்
புதைக்கப்படுகின்றன,
கருங்கட்களாய்..

என் நரம்பினை அறுத்து
தாளமிசைக்கின்றாய்
எதில் நான் கண்ணுறங்க
துயரிலா துக்கத்திலா ?

என் தோட்டத்துக்குக் குயில்கள்
காக்கைகளாய் கரைந்த
காயம்பட்ட பொழுதொன்றில்
காதலிப்பதாய்க் கூறுகின்றாய்

மௌனமாய் நிலம் நோக்குகிறேன்
வெட்கத்தில் தலை கவிழ்வதாய்ச்
சொல்லிப் பெருமையடைகிறாய் நீ !

ஆம்!என்றோ மரித்த
என்னிதயம் என்றும்
உன்னை ஏமாற்றாது!!.

எழுதியவர் : கார்த்திகா AK (20-Nov-14, 1:37 am)
பார்வை : 400

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே