மரத்தைக் காணோம் - Mano Red

மரத்தின் ஓவியம் ஒன்றை
வரைய முயற்சிக்கிறேன்..!!
அது ஒருவேளை
அசைந்துவிடக்கூடும் என்பதால்
ஆழ்ந்த உறக்கத்தில்
இருக்கும்போது
இலையை தூரிகையில் தொடுகிறேன்..!!
இலைகள் வரைந்து
இறுதிச் சொட்டு தீரும் வேலை
அதன் இலைகளில்
அசைவை உண்ர்கிறேன்,
அதன் கிளையில்
பூக்கவிருக்கிற மலர்களின்
காம்பு உடையாமல்
கவனமாக வண்ணம் தீட்டுகிறேன்..!!
தூய காற்றை
கூடுதலாக வாங்க எண்ணி
அதிக கிளைகளையும்,
நிறைய இலைகளையும்
நிரம்பி குலுங்குவதாய்
பசுமையாய் வரைகிறேன்..!!
தினமும் பகலில்
கொஞ்சி மகிழ
அதற்கும் காதலி வேண்டுமென
அருகே ஒரு மரம் வரைந்து
ஆசையாய் நட்டு விடுகிறேன்..!!
அவைகள் காதல் கொண்ட போது
தென்றலை உணருகிறேன்..!
காற்றை சுவாசிக்கும்
மனிதர்கள் இருவரை
எதற்கும் இருக்கட்டும் என
அதன் பக்கத்தில் வரைந்துவிட்டு,
தூரிகைகளைக் கழுவிய பின்
வந்து பார்க்கிறேன்
மரத்தைக் காணவில்லை...!!
முட்டாள் மனிதன் மட்டும்
மூச்சுத் திணறி
அங்கேயே நிற்கிறான்,
மரத்தை அழித்த அவனை
கிழித்து எறிந்து
இப்போது ஓவியம் அழிக்கிறேன்..!!