நள்ளிரவுத் தனிமை
அடேங்கப்பா..
இந்த நள்ளிரவுதான்
எவ்வளவு அமைதியானது!!
எவ்வளவு கொடுமையானது!!!
தனிமையின் தாம்பத்யத்தில்
தலையணை அணைத்திடவா ?-இல்லை
கணிணிக்குள் புகுந்து
கண்களைக் கெடுத்திடவா?
இரவின் மடியயர்ந்து
தூக்கங்கள் எடுத்திடவா? -இல்லை
துரோகங்கள் தனைநினைத்து
துக்கங்கள் சுமந்திடவா?
நாளைய கடமைகளால்
இன்றை இழந்திடவா? -இல்லை
நேற்றைய இன்னல்களால்
இன்றை இழந்திடவா?
ஆனந்தம் அடையவே
நிலவை நினைத்திடவா? - இல்லை
ஆகாரத் தோல்விகளால்
முகத்தை நனைத்திடவா?
யுத்தங்கள் பிறநினைத்து
உள்ளம் வருந்திடவா? - இல்லை
உறக்கங்கள் பெறநினைத்து
கள்ளும் அருந்திடவா?
ஏகாந்த வாசலிலே
இன்பம் துய்த்திடவா? - இல்லை
ஏனிந்த வாழ்வென்று
மரணம் எய்திடவா?
தனியே வெளிசென்று
விண்ணில் அலைந்திடவா? - இல்லை
இக்கவிஈன்ற சுகம்பெற்று
கண்கள் அயர்ந்திடவா?