கிடைக்காத முகம்
ஏதேதோ வலிகள்
என்னுள்
சமாதிகளாய்
பளிங்குத் திரைக்குள்
கண்ட முகத்தின்
வடுக்களேனச் சுகிக்க
வாழ மறந்து
நின்றது
காலத்தின் பின்னேற்பாடு
போகும் வழியெங்கும்
வெறுமையின்
குரல் கேட்டு ஊமையானதாய்...
அதுவெல்லாம்
கருமேகங்களேனக் குளிர்வித்து
மழை தந்து
போனதொரு பருவக்காற்று ...
வெகுநாளாய்க் காணாமல்
கண்டெடுக்கப்பட்ட
புகைப்படம் போல்
நிகழ்காலப் பிடியில்
மங்கிய துகள்கள்
உதிரும்
இலையுதிர்கால மறைவில்
புது வாசமாய்
பிறந்த வசந்தத்தில்
கால்கள் இரண்டும்
பூமி தொடும் முன்
தவழ்ந்தவளாய்
இளஞ்சிவப்பு ஸ்பரிசத்தில் ....
நான்காண்டுத் தனிமையின்
கிரகண நிழல் விலகுவதாய்
உலகம் மறைத்த
பார்வையிழப்பு
தின்றுவிட நினைத்த
சோடிக் கண்கள் வழியே
துன்பம் குடித்த
கண்ணீர்க் காட்சிகள்
முழுவதும் செரித்ததாய்
இலகுவாய்ச் சொடுக்கெடுத்தன
இதயக் கேவல்கள்...
இனிப் பூஞ்சாரல்கள்
சொரியும்
குளிர் தேடும் கதகதப்பில்
பன்னீர்ப் பூக்களின்
கடிவாளங்கள் அரும்பும்
நுகர்வில்
களி மொட்டுக்கள்
காத்திருக்க
புத்துலக நேர்காணலுடன்
தனியொருவன் ,
எண்ணிலடங்கா விண்மீன்களின்
பொன்னொளிக் கனவுகளாய்
கண் சிமிட்ட
இரவின் பரிவர்த்தனையும்
பகலின் பெருவாழ்வுப்
பண்மொழிக் காதலும்
கடிவதாய்க் கலந்திருப்பேன் ...