அன்புள்ள அம்மாவிற்கு

((கிராமத்திலிருந்து படித்து நகர வீதியில் வேலை தேடி அலையும் ஒரு கிராமத்து பட்டதாரி தனது அம்மாவிற்கு எழுதிய கடிதம்))

அன்புள்ள அம்மாவிற்கு உன் மகன் எழுதுவது

உன் உயிர் நான் நல்ல இருக்கேன்
என் உயிர் நீ எப்படிமா இருக்க.?...

இப்படி உன் அருகில் இருந்து கேட்க ஆசைதான்
உன் உடல்நிலை நான் அறிவேன்
இருந்தாலும் நீ நல்ல இருக்கேன் ராசாணு
இன்றும் பொய்தான் சொல்வாய் அதுவும் நான் அறிவேன்...

என் நிலை சொன்ன
உன் கண் கலங்குமுனு நான் சிரிப்பேன்
உன் நிலை சொன்ன
என் கண் கலங்குமுனு பதிலுக்கு நீயும் சிரிப்ப
எத்துனை நாளைக்குதான் இந்த போலி சிரிப்போ…

உன்னை சுற்றி ஓர் உலகை கண்டேன்
நீதான் என்னோட உலகம்
நான்தான் உன்னோட உலகம்
இன்று ஓர் உலகம் காண்கிறேன்
நீயில்லாமல் தனிமையில் இருக்கையில்....

ஆயிரம் ஆசைகளோடு என்னை படிக்க வைத்தாய்
அதனால்தானோ உன் ஒரு ஆசையை கூட
என்னால நிறைவேற முடியல....

படித்துவிட்டேன் என்ன செய்வது
வேலை தேடுவது
என் வேலை ஆகிவிட்டது....

உன் முகம் பார்க்க மனமில்லை
காரணம் என் முகம் பார்த்தல்
உன் முகம் கண்ணீரில் நனைந்துவிடுமே....

உழைத்து உழைத்தே
நிறமாரிபோச்சு உன்னழகு
ஆனாலும் ஓயவில்லை இந்த வயதிலும்
வயல்காட்டில் உன் வியர்வை துளிகள் ....

வேப்பம் குச்சி சொருகியே
புண்ணா போன உன் காதுக்கு
ஒரு கிராம் தங்கம் கூட
வாங்கி போட முடியாத
வக்கத்த மகனா நயிருக்கேன்....

நம்ம கூரை வீடு
இந்த வெயில் காலத்துக்கு பரவால
இனி வரும் மழை காலத்துக்கு
என்னால ஒரு கூரையாவது வாங்க முடியுமான்னு தெரியல....

அப்பாகிட்ட சொல்லிராத
இருக்கிற காணி நிலத்தையும்
வித்து எனக்கே அனுபிருவாறு....

என்று விடியும் நமக்காய் ஓர் பொழுது
அந்த நாளை தேடியே
நகர விதியில் தினமும் என் நடை பயணம் வேலைதேடி....

உன் முகத்தில் புன்னகையை
நிரந்தரமாக்கும் வரை உன் பிள்ளையின்
தேடல் நிற்க போவதில்லை....

என்மேல் நீ வைத்திருக்கும் நம்பிக்கையே
என்மேல் நான் வைத்திருக்கும்
அதிகபடியான நம்பிக்கை....

என் மனசுல உள்ள எல்லாத்தையும் எழுதிட்டேன்
ஆனா உனக்கனுப்ப மனசில்லை
அதனால எப்போதும் போலவே
இன்னைக்கும் நல்ல இருக்கேனு
அலைபேசில சொல்லிட்டு வைக்கிறேன்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Apr-11, 9:21 am)
பார்வை : 557

மேலே