நிலச் சாமி
கொடும் வாதை சூடிய
நிகழ்கால நிகழ்வுகளின்
அதீத நெரிசலில்
சிக்கித் திணறிய யென்
செந்நெல் பூமியினை
மரணிக்க
என்னவெல்லாமோ நடந்தது
விலை பேசினார்கள்
விளையாதென்றார்கள்
அடுக்கு மாடி குடியிருப்பென்றார்கள்
கோடியில் குளிக்கலாமென்றார்கள் !
நான்
கால் பதிக்கும் போதெல்லாம்
எனது பாத உதட்டின்
முத்தத்திற்காக
தன வரப்புக் கன்னம் காட்டி
காத்திருக்குமெனது
வயற்காட்டின்
மண்ணிற்குள்
என் மூதாதையரின்
வியர்வை
ரத்தமாயோட
சினைக்குள் சினையரும்ப
எனக்குத் தானிய
வரமளித்த தாயல்லவா ?
உயிரைத் தாங்கும்
உடலாதாரம் போல்
பயிரைத் தாங்கி
எமதுயிர் காத்த
எம் குலச் சாமியான
இந் நிலச் சாமியினை
விலை பேசுபவனுக்கது
விலை நிலம் -
என்னக்கு பூவும் பிஞ்சுமாய்
எனதுயிர் விளையும்
விளை நிலமல்லவா ?
புழுதி புரட்டலின்
அதியுன்னத அத்தியாயத்தில்
உழுதுழுது செப்பனிட்ட
வெள்ளாமை கொண்டாடி
கொழித்துக் கிடந்து
இன்று -
கோடை குடித்தயெனதுயிர் நிலம்
வெடிப்புற வீழ்ந்திருப்பினும்
அன்னியனொருவன்
கனரக வாகனமிறக்கி
எனதன்னை பூமியினை
வயிறு கிழிக்க விடுவேனோ ?
கலப்பையின்
கொழு பிளந்து
விளையாட்சி நடந்த
கதிர் பெரும் கம்பீர
திருக் கருணைத் தாயவளின்
மண்புழு நெளியும்
மாசற்ற மடியினில்
கான்கிரீட் விருட்சங்கள்
இரும்பு வேர்விட்டு
கட்டிடக் காடாகி
அவள் -
கருப்பையினை அழித்திட
அனுமதிப்பேனோ ?
விதைக்க விதியிருந்தும்
உழாத விரக்தியோடு
இதுநாள் வரை விறகாகாது
கொலு வீற்றிருக்கும்
கொழு பதிந்தயென்
வெங் கலப்பை
நீல வானம் பார்த்து
நிதமும் காத்திருக்க
என் செம்மண் பூமியெங்கும்
செவ்வரியோட்டிடும்
நாளிற்காக ....
"உழுதுண்டு வாழுமெனை
தொழுதுண்டு பின்வர"
எவருமில்லையென்றாலும்....
தனியோருழவனாய்
காத்திருப்பேன் ...
ஏனெனில் -
" உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ.: தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து " .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
