புதினன்
என்னடையைத்
தெரிந்து கொள்ள
எனக்குப் பின்னே
தொடர்ந்து வந்தானவன்
இமை மூடி திறப்பதற்குள்
அண்டத்தின் ஆழம் சென்று
ஆணிவேரை அசைத்து நின்றேன்
அவனைக் காணவில்லை ..
ஒருவிதமான குயில்பாட்டும்
என்னை மறுசுழற்சி செய்திருக்க வேண்டும்
மறந்துபோய்
அர்த்தங்களைத் தேடி
நாயனக்காரனிடம் நலம் விசாரித்ததில்
விட்டில் பூச்சியும்
விட்டத்து பல்லியும்
விடாது சிரித்தன.
எனக்கு
எழுத்து கணிதம் சொல்லிக் கொடுத்த ஆசான்
இப்போதும் கேட்பார்
ஒன்றிரண்டு மூன்று என்றுதானே வரிசை வரும்
இல்லையென்று சொல்லும் என்னிலக்கணத்தை
அவருக்கும் மறுக்க முடியவில்லை
அதை ஏற்கவும் முடியவில்லை .
நான்
விலாசங்களைத் தொலைத்துவிட்டு
வீதிமுழுக்க அலைவதால்
வானத்துப் பறவைகளும்
என்னைக் கண்டதும்
இவனும் நம் இனத்தவனென்று
சிறகுகளை சந்தோசத்தில் அடித்துக் கொள்ளும்
அண்டப் பெருவெளியில் -
உன்னை அடையாள படுத்து
உன்னை நான் தொடர்கிறேன்...
சண்ட மாருதத்தை
உன் விரலில் அடக்கிக் காட்டு
என்னை நான் இழக்கிறேன்
அதுவரை
நீயும்- பெரியவனில்லை
நானும்- நாணும் நாணலில்லை
........................................
இப்போது திரும்பி
என்னைத் தொடர்ந்தவனைத் தேடினேன்.
அப்போது பொழுது
பகலாகவும் இரவாகவும் இல்லாமல் இருந்தது..