சார் , எப்போ வருவீங்க திரும்பவும்

அரசு பள்ளி மாணவர்களுககு சுய முன்னேற்ற பயிற்சி வகுப்புகளை எடுக்கிறபொழுது மனது நிறைவடைவது உண்மைதான்....தேவை உள்ள இடத்தில் நமது சேவை துளிகூட சிந்தாமல்,சிதறாமல் சென்றடைகிறது என்பதால் இருக்குமோ ..என்னவோ..?
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏதோ ஒருவகையில் அந்த மாதிரியான நிகழ்வுகளை பள்ளிகளிலேயே நடத்தி விடுகிறார்கள் அல்லது பெற்றோர்களாவது தனிப்பட்ட முறையில் அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
ஆனால் வாழ்க்கையை நடத்தவே தினம்தோறும் போராடும் சூழலில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுயமுன்னேற்ற வகுப்பு,பயிற்சி ..என்பதெல்லாம் அநேகமாக கேள்விப்படாத ஒன்று... அவர்களது அதிகபட்ச சுயமுன்னேற்றச்சிந்தனையே தனது மகனோ,மகளோ தன்னைப்போல "நித்தியகண்டம் பூரண ஆயுசாக " இல்லாமல் சொல்லிக்கொள்கிறார்ப்போல ஒரு நிரந்தரமான வருமானம் , " அரைக்காசு உத்தியோகமென்றாலும் அரசாங்க உத்தியோகம்" கிடைக்க வேண்டும் என்பதுதான்...
தங்களது குடும்பத்தில் வறுமையின் காரணமாக ஏற்படும் தகராறுகள், சண்டைகளில் மாணவர்களது மனது உடைந்து சிதறுதேங்காயாக சிதறிப்போய்விடுவதை பல சமயங்களில் நேரடியாக பார்த்ததுண்டு...அவர்களது கண்களிலிருந்து வடிகிற கண்ணீர் அவர்களால் சொல்லப்படாமல் விடப்பட்ட மீத சோகங்களையும் சொல்லிவிடும்...
கடமையே.. என்று சோற்றைப்போட்டு அனுப்புகிற பெற்றவரகளும் உண்டு. பள்ளியிலும் ஆசிரியர்களின் கரங்கள் கட்டிப்போடப்பட்டிருப்பதால் தன்னை அறியாமலேயே தவறு செய்ய ஆரம்பிக்கும் மாணவர்களை திருத்தவோ,கண்டிக்கவோ வழியில்லாததால் முறை தவறிப்போகிற இளைய சமுதாயம் ஏராளம்.. ஏராளம்....
இப்படியான அசாதாரண இன்றைய சூழலில் ...அந்த மாணவர்களை இதுபோன்ற தன்னம்பிக்கை வகுப்புகளால் ஓரளவிற்கேனும் நெறிப்படுத்த முடியும்... நிறைய அரசு பள்ளிகளில் முழு ஆர்வத்தோடும்,எதிர்பார்ப்போடும் ஆசிரியர்களுமே அதை NGOக்களிடமிருந்து வரவேற்கிறார்கள்... அரசாங்கமும் ஆதரிக்கிறது.. எதிர்காலம் குறித்தான நல்லதொரு சிந்தனைகளை தூண்டிவிடுவது வெகு எளிதாகிறது இதன்மூலம்...
தன்னுடைய பலம் எது ? பலவீனம் எது ? என மாணவர்கள் அறிந்துகொண்டாலே ,புரிந்துகொண்டாலே போதுமானது..வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படை தகுதி பெற்றவர்களாய் மாறிவிடுகிறார்கள்..
பலவீனத்தை மெல்ல குறைத்துக்கொள்கிற அதே தருணத்தில் தன்னுடைய பலத்தை மேலும் மேலும் வலிமைப்படுத்துகிறபொழுது அவன் வெற்றிக்கோட்டை நெருங்கிவிடுகிறான்.. அவனுக்கு சொல்லித்தரவேண்டிய ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான வெற்றிச் சூத்திரமே இது ஒன்றுதான்..
இதைத்தெரிந்து கொள்ளாமலே போனதால்தான் அநேகம்பேர் அற்புத திறமைகள் இருந்தாலும் அடையாளம் காணப்படாமலே , வாழ்ந்ததற்கான அடிச்சுவடுகூட இல்லாது போகிறார்கள்....
( இந்த தேசத்தினுடைய பலவீனம்.....யாரும் இந்த தேசத்தை இனி திருத்தவேமுடியாது என்று எல்லோருமே நம்பிக்கையின்றி பிதற்றிக்கொண்டிருப்பது ..
பலம்...அப்படியானதொரு மிதமிஞ்சிய அழுத்தத்தை தாங்கவே முடியாமல் போகிறபொழுது ஏதேனும் ஒரு பக்கத்தில் ஒரு புரட்சி தானாகவே வெடித்துக்கிளம்புவது...யாராவது ஒருவர் மூலமாக...
கடந்த காலங்கள் இதைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றன... கவனிக்கவும்...இப்பொழுதும் நம் தேசத்தில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது..!! )
அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த நல்ல பேச்சாற்றலும் , எதையும் எதிர்பார்க்காமல் தேசப்பணியாக ,தெய்வீகப்பணியாக இதை செய்ய நினைப்பவர்களும் இணைவதன் மூலம் பலமடங்கு பெரிதாக எடுத்துச்செல்லலாம்...
அப்படிப்பட்ட பொதுநல நோக்குடைய பேச்சாற்றல் திறமை கொண்ட உள்ளஙகள் திருப்பூர் பகுதியில் இருந்தால் தொடர்பு கொள்ளுங்களேன்..ரோட்டரி அமைப்புகளே உங்களை உபயோகப்படுத்திக்கொள்ளும்... மாதத்திற்கு ஒருநாள் , ஒருமணி நேரம் உங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் இந்த வேலையைச் செய்தாலும் போதுமே..
அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுநல அமைப்புகளோடு இதை வருங்காலத்தில் மெல்ல ,மெல்ல இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவும் இயலும்...!! முயற்சிப்போம்!!
வழிதவறிப்போகும் மந்தைகளை சீர்செய்ய ஒரு நல்ல மேய்ப்பனாய்.. இயேசுபிரான் அன்று அவதரித்தான். தடம் மாறும்,தடுமாறும் இளையவர்களை தடுத்து நிறுத்தவும், தடம் பதிக்கச்செய்யவும் ...இயன்றதை செய்ய முயல்வோம்..!!
திருப்பூர் குமார் நகர் அரசு பள்ளியில் திருப்பூர் நிட்சிட்டி ரோட்டரி சங்க ஏற்பாட்டில் கடந்த செவ்வாயன்று பத்தாம் வகுப்பு மாணவர்களை வழக்கம்போல உற்சாகப்படுத்தி பேசிவிட்டு செல்கிறபொழுது மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே மாணவர்கள் கடைசியாக கேட்டது...
" சார், எப்போ வருவீங்க ....திரும்பவும்.. ? "

எழுதியவர் : murugaanandan (23-Nov-14, 3:49 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே