தூண்டில் தூரங்கள்
நெட்டித்தட்ட முழுகையில
நேரா வெட்டியிழுத்தா - மீனு
தொண்டையில குத்தாம
தூங்கிக்கிட்டே வருந் தூண்டி....
வைக்கக் குப்பையில
வராது புழுவுன்னு
சாணிக்குப்ப நோண்டி
சந்தனமுன்னு கன்னந் தடவி....
மொழங்காலு தண்ணிகடக்க
முழுக்காலு நனையுமோன்னு
இடுப்புக் கால்சட்டைய
தலைக்கேத்தி கைபொத்த.....
எதுக்காலநின்ன எஞ்சோட்டுப்
பொம்பளப்புள்ள...
எகத்தாளமா சிரிச்சிவக்க...
பொத்துனகையோட மொத்தமா
முழுகுனமே....
இப்படியா வளந்துவந்து
மூக்குக்குகீழ முடிநாலு
பாத்துப்புட்டு... வயசுக்கு
வந்துட்டோமுன்னு
வரப்புக்குழில பொகவிட்டோம்....
காலங் கடந்து போக
கூரைக்கி கீத்துதேடி
கொதறிக்கிட்டே நீ ஓட.....
திண்ணைக்கி மண்ணுவேண்டி
திரும்பிப் பாக்காம நாந் தேட...
இந்தக் காலங் கழிஞ்சி
எப்ப வந்து புடிப்பாய்ங்கன்னு
எச்சிக்குமிழு விட்டுக்
காத்திருக்கும்...
சேத்தடில சிலேபிக் கெண்ட....!!