எப்போது மலரும்

தமிழ்க் கவிதைக்குத்
தாமரைப்பூ சூடலாமா!---

அமிழ்தினிய குரலில்
அதைப்படும் - என்னவளுக்கு
அல்லி மலரைச் சூடலாமா ?

மனம் இனிக்க
வெளிப்படும் தமிழ்
வார்த்தைகளுக்கு
மல்லிகைப்பூ சூடலாமா!

மனமினிக்கத் தமிழ்
பேசிடும் -என்னவள்
செவ்விதழுக்கு
ரோஜாப்பூவைச் சூடலாமா?

கண்கள் குளிர
உருவான தமிழ்
எழுத்துகளுக்கு
குண்டு மல்லிகை சூடலாமா!

கண்களால்
அம்மொழியைப் பேசிடும்
என்னவள் விழிகளுக்கு
காந்தள் மலரைச் சூடலாமா?

பேசினாலே மகிழ்ச்சி
பொங்கும் தமிழுக்குப்
பிச்சிப்பூ சூடலாமா!

பார்த்தாலே மனத்துள்
மகிழ்ச்சி பொங்கும்
என்னவள் அழகின் சிரிப்பிற்கு
மகிழம்பூ சூடலாமா?

எந்தப்பூவைசூடுவது! -நான்
எங்கே அதைத் தேடுவது?

என்தமிழுக்கும்---
என்காதலிக்கும்---என்
இதயம் மலரச் சூடுவதற்கு..

நல்லதொரு
வண்ணமலரும்--
வாசமலரும்

இந்தப்பூமியில்
எப்போது மலரும்?

எழுதியவர் : மா. அருள்நம்பி (24-Nov-14, 10:39 pm)
சேர்த்தது : மா. அருள்நம்பி
பார்வை : 108

மேலே