பணம் என்னடா பணம் - Mano Red

எல்லோருக்கும்
எதாவது ஒரு நேரத்தில்
தேவைப்படும்,
அது மானம் அல்ல
பணம்...!!

யாரோ ஒருவரால்
சம்பாதிக்கும் பணம்,
யாரோ ஒருவரால்
திருடிச் செல்லப் படுகிறது..!!
பணத்துக்காக கொலை செய்ய
பணம் கொடுக்கப்படுகிறது..!!

எதோ ஒன்றை
வாங்குவதற்கும்,
வாங்கிய ஒன்றை
விற்பதற்கும் இடையில்
மனம் தேவையில்லை
பணம் போதும்..!!

யாரோ ஒருவனின்
வயிற்றில் அடித்து
பணம் சம்பாதித்தவன்,
பாதித்த வேறு ஒருவனுக்கு
பணம் தர மறுக்கிறான்,
ஏனெனில்
அவன் பிழைக்கத் தெரிந்தவன் ..!!

பணம் தின்று
கொழுத்தவனின்
பிணத்தை எரிக்கவும்
பணம் கேட்கப்படும்,
பிணவாசம் உணர்ந்து விட்டால்
பணவாசம் அற்றுப் போகும்...!!

உடம்பை விற்ற பணத்தில்
உடைகள் வாங்கப்படுகின்றன,
கடவுளைப் பார்க்க
பணம் கொடுத்து விட்டு
வேண்டுதலில் மீண்டும்
பணம் திருப்பி கேட்கப்படுகின்றன..!!

அரசன் சுவைத்த பணம்
அடிமையின் நாக்கிற்கு
எட்டுவதில்லை,
அதிகம் சேர்த்த பணம்
அன்பின் வழிக்கு
வருவதில்லை..!!

எழுதியவர் : மனோ ரெட் (25-Nov-14, 8:04 am)
பார்வை : 583

மேலே