எதுவும் தடையில்லை
வயதொரு தடையில்லை! - கல்வி
வாய்ப்பொரு தடையில்லை!
வறுமையும் தடையில்லை! -நீ
வாழ்க்கையில் உயர்தற்கே!
மனமது தெளிவானால் - நல்ல
மார்க்கங்கள் புலனாகும்!
செயலது சிறப்பானால் - நீ
ஜெயிப்பது நிஜமாகும்!
வறுமையில் பிறந்தாலும் - வாழ்,
மனதினில் ராஜாவாய்!
வயதினில் முதிர்ந்தாலும் - வாழ்,
மணமுள்ள ரோஜாவாய்!
எல்லாம் தெரிந்தாரும் - இங்கு
யாரும் கிடையாது!
ஒன்றும் அறியாரும் - இவ்
வுலகில் கிடையாது!
படித்தவர் எல்லாரும் - இங்குப்
பதவிகள் பெறவில்லை!
துடிப்புள்ள கல்லாரும் - இங்குத்
தோல்வியைப் பெறவில்லை!
உனக்குள்ள திறமையை - நீ
உணர்ந்ததில் முதன்மை செய்!
உயர்வது அதனாலே - என
உள்ளத்தில் உறுதி வை!
திறமைகள் இருந்தாலும் - பலர்
உயர்வது கிடையாது!
குறை,அவர் குணம்;மேலும் - மனக்
கோழைக்கு உயர்வேது?
சிலருக்கு முன்கோபம்! -இன்னும்
சிலருக்குச் சந்தேகம்!
பலருக்கும் சபைக்கூச்சம்! - இன்னும்
பலருக்கும் தலைவீக்கம்!
குறைகளைச் சரிசெய்வாய்! - நீ
கொள்கையில் பிடிகொள்வாய்!
மனங்களில் இடம்கொள்வாய்! - நீ
வருவதை எதிர்கொள்வாய்!
தகுதிகள் வரும்போது - நல்ல
தருணமும் வரும்தோழா!
தக்கவர் துணையோடு - அது
தைரியம் தரும்தோழா!
திட்டத்தைச் செயலாக்கு! - நீ
தெய்வத்தைத் துணையாக்கு!
கஷ்டத்தை வரவேற்று - உன்
கடமையில் பணியாற்று!
ஆரம்பத் தவறாலே - நீ
அதைரியப் படவேண்டாம்!
சீர்செய்த பின்னாலே - நீ
ஜெயிப்பதை விடவேண்டாம்!
புதுமைகள் உருவாக்கு! - உன்
போட்டியை எருவாக்கு!
புகழ்பொருள் வரவாக்கு! - உனைப்
போன்றவர் கரம்தூக்கு!
இருப்பது மிகக்கீழே! - நீ
நினைப்பது மிகமேலே!
ஊக்கத்தின் விளைவாலே - நீ
உயர்ந்திடு மனம்போலே!
லட்சியம் எதுவானால் - என்ன?
நிச்சயம் நிறைவேறும்
தத்துவம் இதுவாகும்! - இது
தரணிக்குப் பொதுவாகும்!
வயதொரு தடையில்லை! - கல்வி
வாய்ப்பொரு தடையில்லை!
வறுமையும் தடையில்லை! - நீ
வாழ்க்கையில் உயர்தற்கே!