எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 20

தாமரை --பூமிக்கு வந்த மேனகை 1

தாமரை

கதிரவன்
கைதொட்டு
இதழ்
விரிந்திடுவாய்
தென்றல் வந்து
முத்தமிடும் போது
நாணிச்
சிவந்திடுவாய்
தாமரையே
நீ
வானத்திலிருந்து
பூமிக்கு வந்த
மேனகையோ
=======================================================================

அஜம் 2

இறைவன் படைப்பில்
இரை ஆவதற்கென்றே
வந்த பிறவி

அஜம் என்றால்
வட மொழியில்
அ ஜன்ம்
அடுத்த பிறவி
இல்லை
அப்படியானால்
நீ
பிறவா பெருவாழ்வு பெற
நூற்று கணக்கில்
உன்னை வெட்டும்
கசாப்பு கடைகாரனுக்கே
சொர்கத்தில்
முதலிடம்

தத்துவ ஞானத்தில்
வேறுபட்டு
நிற்கும் மதங்களும்
உன்னைப் பலி கொடுப்பதில்
ஓன்று பட்டு நிற்கும்

நீ வேள்வியில்
அவிப் பொருள்
பலிக் கடா

மனிதனுக்கும்
பலிகொள் தெய்வங்களுக்கும்
நீ மாமிச உணவு

உனக்கு
கருணை கட்டினான்
கௌதம புத்தன்
கருணையுடன்
உன்னைப் பார்கிறான்
கவிஞன்

----கவின் சாரலன்
கவிக் குறிப்பு : பட்டுக்கோட்டையார் பாடல்
"இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகமென்று
ஒரு நாளும் நம்பிடாதே "
========================================================================

ஞானி ஆனது ஏன் ? 3

தண்ணீரில் இருந்தும்
அதில் ஒட்ட மாட்டான்
தன் மீது
தண்ணீரையும் ஒட்ட விடமாட்டான்
தாமரை இலையன்
விலகி நிற்கும் ஞானி

தாமரைத் தோழி
நீ அருகில் இருந்தும்
அவன் ஞானி
ஆனது ஏன் ?

கதிரவன்தான்
உன் காதலன்
என்ற துயரம்
தாங்காமலா ?

========================================================================

சிநேகிதியின் கடிதம் 4

அன்பு சிநேகிதி
உன் கை எழுத்தில்லா
கடிதம் கிடைத்தது
உன் எண்ணங்கள்தானே
உன் கை எழுத்து

வரிகள் வண்ணக் கோடுகள்
வார்தைகள் ஒவ்வொன்றிலும்
உன் பார்வை
நிஜங்களின் பிரத்யட்சம்
முன் அமர்ந்து பேசுவது
போன்ற உணர்வு

உன் இதயத்தின்
மறு பக்கத்தை
திறந்து வைத்திருக்கிறாய்

நேரில் வரும்போது
உன் அழகை ரசிக்கிறேன்
கடிதத்தில்
உன்னை தரிசிக்கிறேன்

=======================================================================

குறள் ஓவியமே ! 5

சின்ன இடை அசைய சிரித்து வரும் குறள் ஓவியமே
நீ முன் நடந்தால் உன் பின் வரும் மாலை .
=======================================================================

வள்ளுவர் வாழ்த்து 6

ஓரிரு வரிகளில் உலகினை வரைந்த ஓவியனே நின்
பேரருள் தாள் பணிய என் தமிழ் வாழும்
=======================================================================

உன்னால் சுழலும் உலகம் கதிரவனே ! 7

எல்லாம் இங்கே இறைவன் செயல் என்றாலும்
உன் செயல் வேண்டியே உலகம் சுழலும்
========================================================================
முப்பால் வள்ளுவம் 8

முப்பால் வள்ளுவம் முழுவதும் படித்து விட்டால்
அப்பால் என்ன படிக்க வேண்டும் உலகில்
========================================================================

அசைந்து வருகுது ஹைக்கூ பல்லக்கு 9

ஹய்யா ஹய்யா
அசைந்து வருகுது
அழகிய
ஹைக்கூ பல்லாக்கு
அதில் அமர்ந்து வருகிறாள்
ஜப்பானிய கவிதைப் பேரழகி
சின்ன விழிகளால் பார்க்கின்றாள்
கிமோனோ அணிந்து சிரிகின்றாள்

இலக்கண ஒப்பனை விலக்கிவிட்டால்
உன்னுடன் ஒய்யாரமாய் அமர்ந்து வருவேன்
என்கின்றாள் புதுக்கவிதை தோழி
கிமோனோ கவிதை சிரிக்கின்றாள்

ஹய்யா ஹய்யா
அசைந்து வருகுது
அழகிய
ஹைக்கூ பல்லாக்கு
========================================================================

பாசத்தின் மொழி தாய் 10

பாசத்தின் மொழி தாய்
பண்பிற்கு தந்தை
அரிச்சுவடிக்கு ஆசான்
அருள் வழிக்கு தெய்வம்
அன்பு வழி காதல்
துணை வழி நட்பு
வீரம் நடமிடும் இடம் தோள்கள்
வெற்றி முத்தமிடும் இடம் உன் கால்கள்
வீரம் சக்தி தரும் வரம்
சக்திதான் உலகின் இயக்கம்
இயங்கும் அவள் உலகே
நான் போற்றும் சொர்க்கம்
========================================================================
------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-14, 6:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே