மெல்ல இனி சாவான் தமிழன்

தமிழ்!
அன்று இது..
பிள்ளை மொழி பேச
தமிழா நீ..
திக்கித் திணறி கற்ற மொழி.
.
எழுத்துக் கலை கற்க
நீ எரிச்சல் பட்டு
உன்னில் தேர்ந்த மொழி
.
நின் சிந்தனை திரிக்கு
எண்ணெய் ஊற்றி தீ மூட்டி
வனப்பாய் ஏரிய
வழிகாட்டி நின்ற மொழி
.
பாஷை தெரியா பட்டணம் தன்னில்
பரிதவித்து நின்ற பாவிமகன் உனக்கு
பக்கத்தில் வந்து நின்று
பந்தம் வளர்த்த மொழி
.
கவிஞன் என்ற பித்தனவன்
கவியந்தான் பல படைக்க
அவன் கைக்கத்தி முனையில்
கருமையாய் உதிர்ந்த மொழி
.
இன்று
தலைப்பில் கூட
தமிழ் காண விரும்பா
தன்மானமில்லா மக்களின் மொழி
.
கட்டபொம்மன் கர்ஜனையில்
கம்பீரமாய் நின்ற மொழி-இன்று
நாகரீக எட்டப்பர் சிலர் வந்து
எட்டித்தான் உதைப்பதினால்
தன் மக்களிடத்தில் அயலவனாய்
எட்டி நிற்க்கும் மொழி
.
சங்கம் வைத்து பலர் வளர்த்த
சங்கத் தமிழ் மொழி-இன்று
சந்தையிலும் சிலர் வளர்க்க விரும்பா
வள்ளுவ னவன் மொழி
.
தன் தந்தைக்கிது மூச்சுத்தமிழ்
தனக்கிது பேசுத்தமிழ்..
தன் பிள்ளைக்கிது வீட்டுத்தமிழ்
இவன் பேரனுக்கோ இனி
இல்லை இத்தமிழ் ???
.
உருமாற்றம் பல கண்டு
உருமாறி வந்த மொழி
காலம் பல கடந்து
கடல் தாண்டி சென்ற மொழி - இன்று
தமிழனவன் கருத்துக்குள் தான்
நுழைய ஊசிமுனை துவாரம் தேடி
ஓயாமல் ஓடி அலையும் மொழி
.
அலங்கார மொழிக்கிடையில்
அழகிழந்து வரும்
நம் அன்னை மொழி ...
.
தமிழன் என்ற அடையாளம்
இத்தரணிக் களித்த மொழி
இன்று அடையாளம் இழந்து
மெல்ல சாகும் மொழி
உண்மையில்....
மெல்ல இனி சாவது தமிழல்ல தமிழா
நான்கெழுத்தில் நீ இதுவரை
அழகாய் அணிந்திருந்த
நின் அடையாளம்
.
அடிக்கடி எனக்குள் எழும்
வினா ஒன்றுண்டு
ஆடையில்லா மனிதனவன்
அரைமனிதனாம்
அடையாளமில்லா மனிதனுக்கு
பெயரென்னவோ..??
ஆய்ந்து கொஞ்சம் விடையறிந்தால்
பிழைக்கும் இத்தமிழ்க் குலம்
.

எழுத்தாணி முனையில்
கி.ராதா
.

எழுதியவர் : கி.ராதா (24-Nov-14, 11:53 pm)
பார்வை : 119

மேலே