எவருக்கும் தெரியும்

முயற்சிக்காத எவருக்கும்
கானல் நீரும் கடலாய் தெரியும் !
முயற்சிக்கும் எவருக்கும்
இமயமும் இரண்டடி உயரமாய் தெரியும் !

ரசனையில்லா எவருக்கும்
அழகு ஓவியமும் அவலமாய் தெரியும் !
ரசிக்கத் தெரிந்த எவருக்கும்
சிதைந்த சிற்பமும் அழகாய் தெரியும் !

அர்த்தம் புரிந்தால் எவருக்கும்
ஈரடியிலும் ஈராயிரம் கருத்துக்கள் தெரியும் !
புரிந்திடா நிலையெனில் எவருக்கும்
ஒருவரியும் ஓராயிரம் வரிகளாய் தெரியும் !

சென்றிட மனமிருந்தால் எவருக்கும்
செவ்வாய் கிரகமும் பக்கமாய் தெரியும் !
செல்வதை தவிர்த்திடும் எவருக்கும்
செல்லுமிடம் வானளவு தூரமாய் தெரியும் !

சாதிக்க நினைக்கும் எவருக்கும்
தடைகள் யாவும் படிகளாகவே தெரியும் !
இலக்கில்லா இதயங்கள் எவருக்கும்
இடையில் இடறினாலே முடிவாய் தெரியும் !

அமைதிக்கு வழிதேடும் எவருக்கும்
சுனாமியே வந்தாலும் தென்றலாய் தெரியும் !
மோதல்கள் விரும்பிடும் எவருக்கும்
சிறுதவறும் மலை அளவாய் தெரியும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Nov-14, 8:33 am)
பார்வை : 322

மேலே