முதல் பக்கம்
நல் விதைகளை விதைப்போம்
(நம் குடும்பம் நவம்பர் இதழில் இடம் பெற்ற முதல் பக்க கட்டுரை)
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இரு உறவுகளுக்கிடையே எண்ணில் அடங்காத வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் உடல் மற்றும் மனம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நல்ல குடும்ப வாழ்க்கை என்பது வேறுபாடுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது.
எப்போது நாம் ஒருவரை நம்மிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறோமோ, அப்போது அவரிலிருந்து நம்மை நாம் விலக்கிக் கொள்கிறோம் என்பதுதானே உண்மை. ஏனெனில் சிறு வேறுபாடும், விலகலுமே பகைமை உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தப் பகைமை உணர்வே நாளடைவில் நிரந்தரப் பிரிவுக்கு வழி அமைத்து விடுகின்றது. உறவுகளின் பிரிவுக்கு காரணம் தனி மனிதன் தன்னிலிருந்து உறவுகளைப் பிரித்து வேறுபடுத்திப் பார்த்து பகைமை உணர்வுகளை வளர்ப்பதே. இந்தப் பகைமை உணர்வே போராட்டங்களுக்கு வழி வகுக்கும் விதையாகிறது. இதனாலேயே வீடு என்பது போர்க்களமாக்கப்படுகிறது.
இந்தப் பகைமை எனும் விதை மரமாவதோ அல்லது இன்னொரு விதைக்கு உரமாவதோ தவிர்க்க இயலாதது. ஒருவர் பகைமையில் வளர்ந்து மரமாக அதாவது குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்போது அதன் விதைகளும் அதாவது அவர்களின் பிள்ளைகளும் பகைமையே சுவாசமாக வளர்கின்றனர். பகைமை உணர்வு மிகுந்தாலே அவர்கள் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுவது உறுதி.
இதனால்தான் பகைமை உணர்வு என்ற விதை எந்த உருவெடுத்தாலும் ஆபத்தானதே. குடும்பத்தின் தொடக்கப் புள்ளி நட்பு. நட்பின் ஆதார சுருதி புரிதல். புரிதலின் முக்கிய அம்சம் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளல். நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளல் என்பது உள்ளதை உள்ளபடி உள்வாங்குதல்.
இத்தகைய சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றையும் நாம் கற்றுக்கொண்டு நன்முறையில் வாழ்வதற்கு சிறந்த கல்விக்கூடம் நம் குடும்பம். இதனை நன்கு உணர்ந்ததாலேயே குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றார்களோ. நல் விதைகளை விதைத்திடுவோம். நற்கனிகளை சுவைத்திடுவோம்.