நீயே எனது கவிதை - நாகூர் கவி
நானெழுதும் கவிதைகளுக்கு
சந்தம் தேவையாம்....
என்னவளே....
உனது பெயரை
கவிதையின் இடையிடையே
போட்டுக் கொள்ளலாமா...?
அப்போதுதான்
கவிதையின் இடையும்
அழகாய் இருக்கும்....
கவிதைக்கு அணி
ஒன்றும் தேவையாம்....
என்னவளே....
நீ காதோரம் அணிந்திருக்கும்
தோட்டினை பற்றி சொல்லி
என் கவிதை ஏட்டினை
அழகுப்படுத்திக் கொள்ளவா....?
கவிஞர்கள் சீர்
எங்கேவென கேட்பார்களே...
என்ன சொல்வது....?
இந்த கவிதையையே
நீ எனக்கு சீராய்
தந்துவிட்டாயென சொல்லிவிடவா....?
எதுகை மோனை
எங்கே என்று கேட்டால்
என்ன சொல்லிட....?
எது கை
எது காலென
எனக்கே தெரியவில்லை
என் மேனகையின்
ஒரே பார்வையாலென
ஒரே போடாய் போட்டுவிடவா...?
இதுதான் உனது
இலக்கண இலட்சணமா என்பார்களோ...?
இலக்கணமில்லா
தலைக்கனமில்லா
ஒரு இலக்கான
அதுவும் லக்கான
காதல் எனதென்பேன்...
ஐயோ....
இவனுக்கு பைத்தியம்
முத்திவிட்டதென
தனது கையால்
நெற்றியில் இரண்டு
போட்டுக்கொள்வார்களோ...?
என்னை உனது
பைத்தியமென சொல்வோரையும்
அவர்களது நெற்றியில்
இரண்டு போடு போட வைத்த
உனது காதலை என்னவென்பேன்....?
இதைத்தான் நான்
காதல் வெண்பா என்பேன்...!