தீய உறவு தகுமோ

உறைந்திருக்கும் உயிரொன்றின் மேலே
==உனையறியா வகையினிலே மெல்ல
மறைந்திருக்கும் உயிர்கொள்ளி கிருமி
==மறுப்பின்றி உனக்குள்ளே புகுந்து
சிறைபிடித்து உன்வாழ்வை சிதைத்து
==சீரழிக்கும் எனுமுண்மை உணர்ந்தால்
கறைபடியும் உன்பெயரை காத்து
==களங்கங்கள் வாராமல் தடுக்கும்

துரோகங்கள் இழைக்காத நெஞ்சம்
==தூண்போல நீகொண்டு விட்டால்
துர்ரோகங்கள் அண்டவரும் இச்சை
==துண்டித்து காப்பாற்றும் மூச்சை.
உரோமத்தை இழக்கின்ற மானாய்
==உயிராக மானத்தை காக்கும்
சிரமத்தை மேற்கொண்டு பாரு
==சிரம்மீதில் கிரீடந்தான் நூறு

உடலிச்சை உயிர்க்கெல்லாம் பொதுவே
==உயிர்வாழ்வின் உயர்வான நிலத்தில்
மடலிட்டு மகிழ்வோடு உழுது
==மறைவோடு பொருளோடு பயிரை
கடல்கொண்ட அலைபோல தொடர்ந்து
==கனிவாக துணிவோடு அறுத்து
விடும்போது குறைவில்லை .ஆங்கே
==விளையாது கொடும்நோயும் காண் நீ

தொற்றுகின்ற நோய்க்கெல்லாம் மருந்து
==தொட்டிலிலே கிடக்கின்ற போதும்
தொற்றுமெயிட்ஸ் நோய்க்கென்று இன்றும்
==தோன்றாத மருந்தொன்றி னாலே
பற்றுகின்ற நோய்பரவி உலகில்
==பச்சிளங்குழந் தைகளுமே தவிக்க
உற்றுநீ நோக்கியே தீய
==உடலுறவில் போய்வீழ்தல் தகுமோ?

* மெய்யன் நடராஜ்

(டிசம்பர் 1 சர்வதேச எயிட்ஸ தினத்துக்காய்)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Dec-14, 2:19 am)
பார்வை : 111

மேலே