பறவை மனிதன்

______________ பறவை மனிதன் ______________

அகண்ட சிறகு விரித்து
அண்டம் மிதித்து
பறக்கத் தொடங்கியிருந்தான்
பறவை மனிதன்.

பசுவனங்களை உண்டு
செரித்திருந்த போதையில்
பெருந்திரள்ச்சியுடன்
வளரத்துவங்கியிருந்த
அவன் சிறகுகள்
மழைகளுறுஞ்சும்
வித்தை கற்றிருந்தன.

காலசுழற்சி பலகண்டுயர்ந்த
கரும்பெரும் பாறைசூழ்
கனிம மலைகள்,
கூரலகு கொத்தல்களில்
குன்றிப் பொடியாகி - அவன்
கூட்டினுள் தரையாகிவிட்டிருந்தன.

நல்வனம் புசித்தும்
நெடுமலை ருசித்தும்
வந்த விக்கல் தீர
நதிபல குடித்தும் போதாது
நீள்நகம் கொண்டதன் படுகைகளும்
நோண்டப்படுகின்றன.

எப்போதேனும்
தன் இரைத்தேடலை
தடுக்கவல்ல வேடனுக்கு
பசியாற எச்சமிட்டு
நிழலாற இறகுதிர்க்கும்
பறவை மனிதன்
உயரப்பறக்கிறான்.

அவன் நாளைய பறத்தலுக்கான
வானத்தை வளப்படுத்தும்
அன்றைய பணிமுடித்த
நிலத்து மனிதன்
வளமில்லாது
பழமில்லாது
நீரில்லாது
பசித்தே சாகிறான்.

எழுதியவர் : ஈ.ரா. (1-Dec-14, 3:42 pm)
பார்வை : 274

மேலே