நரை கூடிக் கிழம் எய்தி

ஒரு மதியஉணவு அருகாமையில்
எனக்கான
அம்மாவின் தேர்வும்
உன்னுடையதுமான அன்றையதும்
ஒரேமாதிரியாகிப் போக...
இன்னபிற பிடித்தங்கள் கேட்டு
அதுவும் ஒன்றென
ஆச்சரியங்களில் திளைத்த
ஒரு மாலைத் தேநீரின்போது
காதல் மொழிந்து...
புத்தகப் பிரதிகள்
பரிமாறி...
பூங்கா.. கடற்கரையென
கைகோர்த்துத் திரிந்து..
மாங்கல்யம் தந்துனானேக்கள்
கழிந்து...
எனக்காக நீயும்
உனக்காக நானுமாய்
நமக்கான ஒன்று சேர்த்து
நாமாக ஓடத் தொடங்கி...
சனிக்கிழமை வீடுசுத்தமும்
ஞாயிறுகளின் கறிக்குழம்புமாய்..
எப்போதாவது குளிர்ந்த
நடுஇரவு விழித்தல்களின் பின்
தேவைகளுக்காய்
புணர்ந்து.... திரும்பிப்
படுத்துக்கொண்ட வாழ்க்கையின்
ஒருநாள்...
விடலை வயதெட்டியிருந்த
பிள்ளை...காலைக் காபியோடு
திருமணநாள் வாழ்த்துக்கள்
சொல்லிப்போக ....
எதுவோ உரைத்தது போல்
உன் தோள் தொட்டிருந்த என் ..
சட்டைப் பொத்தான்கள்
திருகிக் கொண்டிருந்தாய்....
இரண்டாம் போக
விளைச்சலென துளிர்த்திருந்தது
காதல்..........